மேகாலயாவில் தேனிலவு சென்றிருந்தபோது கொடூரமாக கொலை செய்யப்பட்ட ராஜா ரகுவன்ஷி வழக்கில், விசாரணையில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய பெயர் திடீரென வெளிப்பட்டுள்ளது. சஞ்சய் வர்மா என்பவர், ராஜாவுக்கும் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷிக்கும் திருமணம் ஆவதற்கு முன்னும் பின்னும், சோனமுடன் பலமுறை தொலைபேசியில் பேசியிருப்பது அம்பலமாகியுள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த அழைப்பு விவர பதிவுகள், மார்ச் 1 முதல் மார்ச் 25 வரை சோனமும் சஞ்சய்யும் 119 முறை தொலைபேசியில் பேசியுள்ளனர் என்பதை காட்டுகிறது. தற்போது, சஞ்சய்யின் மொபைல் எண் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 23 அன்று, மேகாலயாவின் கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள வெய் சாவ்தாங் நீர்வீழ்ச்சி அருகே, ராஜா தாக்கப்பட்டு கொல்லப்பட்டு ஒரு பள்ளத்தாக்கில் வீசப்பட்டார். அவரது உடல், 10 நாட்களுக்கு பிறகுதான் மீட்கப்பட்டது.
காவல்துறையின் கூற்றுப்படி, ராஜாவை கொலை செய்ய நியமிக்கப்பட்ட மூன்று கூலிப்படையினரில் ஒருவரான விஷால் சிங் சவுகான், “தாவோ” எனப்படும் உள்ளூர் கத்தியால் ராஜாவை முதலில் தாக்கினார். அப்போது சோனம் அங்கேயே இருந்ததாகவும், கணவர் ரத்தம் வந்து அலற தொடங்கியதும் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டதாகவும், அவர் பலமுறை தாக்கப்பட்டதால் இறந்த பிறகுதான் மீண்டும் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த மூன்று தாக்குதல்தாரர்களான விஷால் சவுகான், ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோரை, சோனமின் காதலன் என்று கூறப்படும் ராஜ் குஷ்வாஹா நியமித்துள்ளார். ராஜ் குஷ்வாஹா, இந்தூரில் உள்ள சோனம் குடும்பத்திற்கு சொந்தமான ப்ளைவுட் வியாபாரத்தில் பணிபுரியும் 20 வயது கணக்காளர்.
காவல்துறையினர் நம்புவது என்னவென்றால், சோனம் இந்தக் கொலையில் சதி செய்ததுடன் மட்டுமல்லாமல், தாக்குதலை தொடங்க சைகை காட்டி, பின்னர் உடலை அப்புறப்படுத்தவும் உதவியுள்ளார்.
கொலை, வெய் சாவ்தாங் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஒரு ஒதுங்கிய பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த இடம், அதன் தனிமையான தன்மை மற்றும் சாட்சிகள் இல்லாத காரணத்தால் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மேகாலயா காவல்துறையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரும் இதற்கு முன்பு இந்த இடத்திற்கு வந்ததில்லை.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமையிலான சம்பவ இட மறுசீரமைப்பின் போது, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் சோஹ்ரா மற்றும் நோங்கிராய்ட் கிராமங்களில் பல இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அவர்களின் நடமாட்டங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டன. ராஜாவின் உடல் வீசப்பட்ட அதே பள்ளத்தாக்கில் இரண்டாவது கத்தியும், கொலையின் போது ஆகாஷ் ராஜ்புத் அணிந்திருந்ததாக கருதப்படும் ஒரு வெள்ளை சட்டையும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது புதியதாக சஞ்சய் என்பவரின் பெயரும் ராஜா கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படுவதால், அவருக்கும் சோனமுக்கும் என்ன உறவு? ராஜா கொலையில் சஞ்சய் பங்கு என்ன என்பதெல்லாம் விசாரணையில் தான் தெரிய வரும். சோனம் இன்னும் யார் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும், இது வெறும் காதலுக்காக மட்டும் இந்த கொலை நடந்திருக்காது என்றும், பின்னணியில் வேறொரு முக்கிய இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு அப்பாவியின் ஆண்பாவம் பொல்லாதது என்றும், சோனம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்,.