இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது இனி, அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாததற்கான கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்த அதிரடி அறிவிப்பு, வரும் ஜூலை 7, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வங்கி சேவைகளை எளிதாகவும், மலிவாகவும் கிடைக்க செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை குறைந்தபட்ச இருப்பு தொகைக்கான அபராத கட்டணத்தை நீக்கியுள்ள நிலையில், இந்தியன் வங்கியும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
இந்தியன் வங்கியின் இந்தக் குறிப்பிடத்தக்க நடவடிக்கை, மாணவர்களிலிருந்து மூத்த குடிமக்கள் வரையிலும், சிறு வணிகர்கள் முதல் கிராமப்புற வாடிக்கையாளர்கள் வரையிலும் பரந்த அளவிலான கணக்குதாரர்களுக்கு பயனளிக்கும். குறிப்பாக, இதுவரை வங்கி சேவைகளை அணுக முடியாத அடித்தட்டு மக்கள் உட்பட பலரும் முறைப்படுத்தப்பட்ட வங்கி அமைப்புக்குள் வர இந்த அபராத ரத்து நடவடிக்கை ஒரு பெரிய ஊக்க சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மினிமம் பேலன்ஸ் அபராத ரத்து மட்டுமின்றி இந்தியன் வங்கி மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. தனது ஒரு வருட மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (MCLR) வட்டி விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 9.00% ஆக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி குறைப்பும் ஜூலை 3, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைத்து, நேரடி பயன் அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் வங்கி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஏற்கனவே ஜூலை 1 முதல் அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பு தொகையை பராமரிக்காததற்கான அபராத கட்டணங்களை நீக்குவதாக அறிவித்திருந்தது. கனரா வங்கிக்கு பிறகு, இந்த அபராத கட்டணங்களை நீக்கிய இரண்டாவது பொதுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி விளங்கிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.