தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. அவர் தனது முதல் தேர்தலில் 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும், ஆனால் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் கட்சியை துடிப்பாக நடத்தி வந்தால், 2031 ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக அதிக வாய்ப்பு இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில்தான், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அரசியல் விமர்சகர் ஜீவசகாப்தம், விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து ஒரு புதிய கோணத்தை முன்வைத்துள்ளார். அவரது கூற்றுப்படி, விஜய்க்கு ஆட்சியை பிடிப்பது முதன்மையான நோக்கமல்ல என்றும், அவருடைய இலக்கு திமுக கூட்டணி மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணியில் கல் எறிந்து, அங்குள்ள சில கட்சிகளை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் விஜய்யின் ஒரே நோக்கம்,” என்று ஜீவசகாப்தம் கூறியுள்ளார்.
திமுக தற்போது தொடர் வெற்றிகளை பெற்று வருவதற்கு முக்கிய காரணம், அந்த கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இருப்பதுதான் என்றும், இந்த கட்சிகள் இரண்டும் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால், திமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகளையும் கூட்டணியில் இருந்து வெளியேற்றும் முயற்சியை மட்டுமே விஜய் செய்து வருகிறார் என்றும் ஜீவசகாப்தம் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “நான் ஒரு நடிகரை நம்பி, அவருடைய கட்சியின் பின்னால் செல்ல மாட்டேன். இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். எனவே, இந்த கூட்டணியில் இருந்து வெளியே வர மாட்டேன்,” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை என்பதால், விஜய்யின் இந்த திட்டம் பலிக்காது என்றும் ஜீவசகாப்தம் கூறினார்.
ஆனால், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம்பிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் வேறு விதமாக கருதுகின்றனர். திமுக கூட்டணியில் தற்போதைய நிலவரங்களால் கடும் அதிருப்தியில் இருக்கும் திருமாவளவன், ஒருவேளை திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் நிச்சயம் வெளியேறிவிடுவார் என்றும், அப்போது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியாக இணைய தயங்க மாட்டார் என்றும் கூறுகின்றனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்து கொண்டிருக்கிறார் என்றும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் கண்டிப்பாக ராகுல் காந்தி ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்றும், அது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஜீவசகாப்தம் சொன்னது போல், விஜய்க்கு ஆட்சியைப் பிடிப்பது நோக்கமில்லையா? திமுக கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவது மட்டும்தானா அவரது நோக்கமா? அல்லது திமுகவில் இன்னொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின் வளர்ச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும், ஸ்டாலினுடன் திமுகவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுதான் அவரது உண்மையான நோக்கமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய்யின் அரசியல் பயணம் தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர போகிறது என்பதை வரும் காலங்கள் உணர்த்தும்.