சர்க்கரை நோய் என்பது வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பும், மாற்றங்களும் தேவைப்படும் ஒரு நாள்பட்ட உடல்நல குறைபாடு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் போதுமானதாக இல்லாததே இதன் முக்கிய அம்சம். இது இரண்டு முக்கிய வகைகளை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும், இன்சுலின் அளவை கணக்கிட வேண்டும், அதற்கேற்ப வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தாலும், எதிர்பாராத ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்பதால், நீரிழிவு நோய் பெரும் சவாலானதாகவே உள்ளது.
இந்த நிலையில் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக செயற்கை கணையம் (Artificial Pancreas) ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. இது சரியான குளுக்கோஸ் அளவுகளின் அடிப்படையில் இன்சுலின் விநியோகத்தை தானாகவே உருவாக்குகிறது. ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு வழியை வழங்குகிறது. நீரிழிவு மேலாண்மையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
செயற்கை கணையம் என்பது ஒரு Closed-Loop System ஆகும். இது குளுக்கோஸ் அளவுகளை தொடர்ச்சியாக கண்காணித்து, பொருத்தமான அளவு இன்சுலினை வழங்குகிறது. இது மூன்று முக்கிய கூறுகளை கொண்டுள்ளது:
1. தொடர்ச்சியான குளுக்கோஸ் மானிட்டர் (CGM): இது தோலின் கீழ் பொருத்தப்படும் ஒரு சிறிய சென்சார் ஆகும். இது பகல் மற்றும் இரவு முழுவதும் குளுக்கோஸ் அளவை அளவிடுகிறது. சர்க்கரை அளவு வித்தியாசமாக இருந்தால் இது உடனடி சரிசெய்தலை அனுமதிக்கிறது.
2. இன்சுலின் உட்செலுத்துதல் பம்ப் (Insulin Infusion Pump): இது ஒரு சிறிய குழாய் (கதீட்டர்) வழியாக இன்சுலினை வழங்குகிறது. இது தோலின் கீழ் ஒரு ஊசி செருகப்பட்டு பல நாட்களுக்கு ஒரே இடத்தில் இருக்கும். இது தினமும் பலமுறை ஊசி போடும் தேவையை நீக்குகிறது. மேலும், தேவைப்படும்போது இன்சுலின் கிடைப்பதை உறுதி செய்கிறது.
3. கட்டுப்பாட்டு அல்காரிதம் (Control Algorithm): இது CGM-லிருந்து வரும் குளுக்கோஸ் அளவுகளை பகுப்பாய்வு செய்து, இரத்த சர்க்கரை போக்குகளின் அடிப்படையில் இன்சுலின் விநியோகத்தை சரிசெய்ய இன்சுலின் பம்ப்புக்கு தானாகவே அறிவுறுத்துகிறது.
இந்த மூன்று பகுதிகளை கொண்ட செயற்கை கணையம், ரத்த சர்க்கரை அளவின் உயர்வை கட்டுப்படுத்துகிறது. மேலும், ஆரோக்கியமான கணையத்தை போலவே இணைந்து செயல்படுகிறது. செயற்கை கணைய அமைப்பு முக்கியமாக டைப் 1 நீரிழிவு உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். டைப் 1 நீரிழிவில், கணையம் இன்சுலினை உற்பத்தி செய்யாது. மேலும் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், ஊசி மூலம் அல்லது இன்சுலின் உட்செலுத்துதல் பம்புகள் மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த செயல்முறை நாள் முழுவதும் தொடர்கிறது.
ஒரு மனிதனுக்கு இன்சுலின் அளவுகள் மிக குறைவாக இருந்தால், இரத்த சர்க்கரை உயர்ந்து, நரம்பு பாதிப்பு, சிறுநீரக நோய், இருதய பிரச்சனைகள் போன்ற நீண்டகால சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். இன்சுலின் அளவுகள் மிக அதிகமாக இருந்தால், சுயநினைவு இழப்பு அல்லது கோமாவுக்கு கூட வழிவகுக்கும்.
இந்த நிலையில் தான் செயற்கை கணையம், இன்சுலின் விநியோகத்தில் தானியங்கு, முறையின் மூலம் இயங்கி இத்தகைய திடீர் ஏற்ற இறக்கங்களை குறைக்கிறது. மருத்துவ ஆய்வுகள், செயற்கை கணையத்தை பயன்படுத்தும் நோயாளிகள் சிறந்த ஒட்டுமொத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு, குறைவான ஏற்ற இறக்கங்கள் மற்றும் மேம்பட்ட நீண்டகால சுகாதார விளைவுகளை அனுபவிப்பதாக காட்டுகின்றன.
சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரையுடன் செயற்கை கணையத்தை பெறலாம். சில செயற்கை கணைய மாதிரிகள் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கும் அங்கீகரிக்கப்பட்டு கிடைக்கின்றன.
செயற்கை கணையம் நீரிழிவு மேலாண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றாலும், விலை உயர்ந்தது. மேலும், பொது மக்களால் பரவலாக பயன்படுத்த முடியாததற்கு இது ஒரு முக்கிய தடையாக உள்ளது. மேலும் இதன் பராமரிப்பு மற்றொரு கவலையாகும். சென்சார் மற்றும் பம்ப் இரண்டையும் எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும். சில நோயாளிகள் சாதனத்தை அசௌகரியமாக உணரலாம். மேலும், சென்சார்கள் தொடர்ந்து மாற்றப்பட வேண்டும். இன்சுலின் சேமிப்பகங்கள் மீண்டும் நிரப்பப்பட வேண்டும். இது ஒட்டுமொத்த பராமரிப்பு செலவை அதிகரிக்கும்.
இருப்பினும் எதிர்காலத்தில் இதன் விலை குறைந்து, சில அசெளகரியங்களுக்கும் தீர்வு கண்டால், உலகில் சர்க்கரை நோயாளிகளே இல்லை என்ற நிலை வரக்கூட வாய்ப்புள்ளது.