தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசின் இளம் அமைச்சர்களின் நிர்வாக செயல்பாடுகளையும், அவர்கள் மேற்கொண்டு வரும் அதிரடி ஆய்வுகளையும் கண்டு, பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்திற்கு பழகிப்போன சிலர் தற்பொழுது விமர்சனங்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர். அனுபவமில்லாத சின்ன பசங்களையெல்லாம் அமைச்சர்களாக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத கூத்தாக இருக்கிறது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த விமர்சனங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்னவென்றால், பல தசாப்தங்களாகத் தமிழக அரசியல் களம் பார்த்துப் பழகிய அந்தப் பழைய “அமைச்சர் கெத்து” தற்போதைய புதிய ஆட்சியில் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டுள்ளதுதான்.
முந்தைய காலகட்டங்களில் அமைச்சர்கள் என்றாலே பெரிய சொகுசு கார்களில் வலம் வருவதும், தங்களது துறையின் கீழ் வரும் ஒப்பந்ததாரர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசுவதுமே வழக்கமாக இருந்து வந்தது. அப்படி நடக்கும் சந்திப்புகளில் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றிப் பேசுவதை விட, தனக்கு 15 சதவீதம் கமிஷன் வேண்டும் அல்லது 35 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசுவதையே மக்கள் கதைகதையாகக் கேட்டுப் பழகியிருந்தனர். ஆனால், தற்போதைய தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்கள், எந்தவொரு ஒப்பந்ததாரரும் யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கக் கூடாது என்றும், கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அதிரடியாகப் புதிய சட்டத்தையே கொண்டு வந்துள்ளார்.
இந்த வியக்கத்தக்க மாற்றத்தை அமைச்சர்கள் சும்மா மேடைக்காகப் பேசவில்லை என்பதை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரே தற்பொழுது அதிகாரப்பூர்வமாகப் பேட்டி கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ அர்ஜுனா அவர்கள் “எந்தவொரு அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்கோ அல்லது எம்.எல்.ஏ-க்களுக்கோ ஒப்பந்ததாரர்கள் யாரும் லஞ்சம் தரக் கூடாது” என்று கறாராக உத்தரவிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கமிஷன் கொடுத்தால் மட்டுமே டெண்டர் என்றிருந்த நிலையை மாற்றி, நேர்மையான முறையில் திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசு வழியவகை செய்துள்ளது தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதேபோல், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களும் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மின்சார வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆட்சிக் காலத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு கூட, பவர் சென்டராக இருந்த முக்கியப் புள்ளிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்களை மிரட்டி, சுமார் 35 சதவீதம் வரை கமிஷன் கேட்டுப் பயங்கர நெருக்கடிகளைக் கொடுத்ததாக ஒப்பந்ததாரர் சங்கத் தலைவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதற்குத் தகுந்த ஆதாரமாக, இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கடந்த ஆட்சியில் பவர் சென்டராக இருந்த காசி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; தவெக அரசு வந்த பிறகே இந்த ஊழல் சிஸ்டம் ஒழிந்துள்ளதாக அவரே சாட்சியும் அளித்துள்ளார்.
அரசியல் கமிஷன் கலாச்சாரம் ஒருபுறம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றால், மறுபுறம் சாதாரண கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அப்போலோ, காவேரி, ராமச்சந்திரா போன்ற பெரிய விஐபி தனியார் மருத்துவமனைகளுக்கு ஓடும் பழைய விஐபி கலாச்சாரமும் தற்பொழுது தவெக அரசால் அடியோடு மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜா அவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் அனைவரும் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் போது நேராக அரசு பொது மருத்துவமனைகளுக்கே சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று புதிய வழிகாட்டுதலைக் கொண்டு வந்துள்ளார்.
அமைச்சரின் இந்த வார்த்தைக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழகத்தின் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர், அண்மையில் தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது அவரை எந்தவொரு ஆடம்பர தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லாமல், நேராக அரசு மருத்துவமனையிலேயே அனுமதித்து முழுமையான சிகிச்சை அளித்துள்ளார். காசு கொடுத்துப் பழகிய ஒப்பந்ததாரர்களும், விஐபி கலாச்சாரத்திற்குப் பழகிய பழைய அரசியல்வாதிகளும் இந்த எளிய நிர்வாக மாற்றங்களைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாமல் விமர்சித்தாலும், சாமானிய மக்களுக்குத் தரமான சேவைகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் தவெக அரசின் இந்த வெளிப்படையான சிஸ்டம் தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் நேர்மையான நிர்வாகப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
