கோடை காலத்தில் ரூம்களை ஃபிரிட்ஜ் மாதிரி கூலா வச்சுக்கணும்னு நாம எல்லாரும் விரும்புவோம். ஆனா, பெரும்பாலான ஏசிகளில் 16 டிகிரி செல்சியஸ்க்கு கீழே குளிர்விக்க முடியாது. ஆனால் இப்போது அந்த குறைந்தபட்ச செட்டிங்கிலும் ஒரு மாற்றம் வரப்போகிறது.
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனிமேல், ஏசி வெப்பநிலையை 20 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வைக்க முடியும்! இந்த செய்தி வெளியானதும், நெட்டிசன்கள் வழக்கம்போல வேடிக்கையான மீம்களையும், கருத்துகளையும் அள்ளி வீசி இணையத்தை கலக்கினர்.
பல நகரங்களில் வெயில் கொளுத்துவதாலும், மின்சார பயன்பாடு அதிகரிப்பதாலும், ஏசிகளின் அதிகப்படியான பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், மின்சாரத்தை வீணாக்குவதை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிலர் இதை நல்ல நடவடிக்கை என்று பாராட்டினாலும், பெரும்பாலானோர் இதை கண்டித்துள்ளனர். “வேற பல பிரச்சனைகள் இருக்க, ஏசியை ஏன் குறி வைக்கிறாங்க?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு ஒரு நெட்டிசன், “ஏசியில் இனி ‘நானோ சிப்’ வரும். 20 டிகிரிக்குக் கீழே வெப்பநிலையை குறைத்தால், போலீஸ் ஸ்டேஷனுக்கு சிக்னல் போய், ஏசியை பறிமுதல் பண்ணிடுவாங்க. இது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக்!” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “ஏசிகளை மத்திய அமைச்சகமே ரிமோட் மூலம் கட்டுப்படுத்தணும். ஏசி வாங்குறவங்க ஆதார் எண்ணை இணைச்சு, வெப்பநிலை மாற்றத்துக்கு ‘எம்-ஆதார்’ ஆப் வழியா விண்ணப்பிக்கணும். அது சாட்டிலைட் வழியா ‘தேசிய குளிரூட்டி வெப்பநிலை கண்காணிப்பு மையத்துக்கு’ போய் ஒப்புதல் வாங்கணும்!” என்று கலாய்த்துள்ளார்.
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், “ஏர் கண்டிஷனர்கள் குறித்த புதிய விதி விரைவில் வரும். இதன் மூலம், ஏசியின் வெப்பநிலையை 20 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வைக்க முடியும். எல்லோரும் ஒரே மாதிரி வெப்பநிலையை பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்,” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.