கொலை கொலையாய் முந்திரிக்கா.. தேனிலவு கொலையில் சோனம் குடும்ப உறுப்பினருக்கும் தொடர்பா? வங்கி பரிவர்த்தனையில் அதிர்ச்சி தகவல்..!

மேகாலயாவில் நடந்த தேனிலவு கொலை வழக்கு, இப்போது ஒரு புதிய கோணத்தில் திரும்பி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இல்லாத ஜிதேந்திரா ரகுவன்ஷி என்ற ராஜா ரகுவம்சியின் குடும்ப உறுப்பினர் பெயர்…

sonam1

மேகாலயாவில் நடந்த தேனிலவு கொலை வழக்கு, இப்போது ஒரு புதிய கோணத்தில் திரும்பி, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இல்லாத ஜிதேந்திரா ரகுவன்ஷி என்ற ராஜா ரகுவம்சியின் குடும்ப உறுப்பினர் பெயர் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொல்லப்பட்ட ராஜா ரகுவன்ஷியின் மனைவியான சோனம், கூலிப்படையினருக்கு மே 23 அன்று முதற்கட்ட பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால், அந்தப் பணம் ஜிதேந்திரா ரகுவன்ஷியின் வங்கிக் கணக்கிலிருந்துதான் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிதி பரிவர்த்தனைதான் இப்போது ஜிதேந்திராவையும் சந்தேக பட்டியலில் சேர்த்திருக்கிறது.

ஆனால் இதுகுறித்து சோனம் சகோதரர் கோவிந்த் ரகுவன்ஷி கூறியபோது, ஜிதேந்திரா தங்கள் குடும்ப உறவினர் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், சோனமின் யுபிஐ கணக்கு ஜிதேந்திராவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார். ஆனால், சோனமின் பெயரிலேயே கணக்கு ஏன் இல்லை என்பதற்கு அவர் தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை என்பதும் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது.

இந்தத் தகவல்கள் வெளியானதும், இது ‘ஹவாலா’ பரிவர்த்தனையாக இருக்குமோ அல்லது குடும்பத் தொழிலில் ஏதாவது முறைகேடு நடந்திருக்குமோ என யூகங்கள் எழுந்தன. ஆனால், கோவிந்த் இதை மறுத்து, “ஜிதேந்திரா தங்கள் குடும்பத் தொழிலில் சாதாரண ஊழியர் மட்டுமே. அவர் கணக்கில் இருந்தது குடும்பப் பணம்தான், அது வழக்கமான வியாபார பரிவர்த்தனைகளுக்குத்தான் பயன்படுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ராஜாவின் கொலை தொடர்பாக ஏற்கனவே சோனம், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூன்று கூட்டாளிகள் என ஐந்து பேரை மேகாலயா போலீசார் கைது செய்து, எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இப்போது ஜிதேந்திராவின் பெயர் வந்திருப்பதால், இந்தக் கொலை சதிக்குப் பின்னால் உள்ள பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேலும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

ராஜா இறந்த பிறகு, சோனமின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்ததால், ஷில்லாங் போலீசார் ஆதாரங்களுடன் அவரை எதிர்கொண்டனர். அதன் பிறகுதான் சோனம் உண்மையை ஒப்புக்கொண்டார். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் மேல் விசாரணைக்காக மேகாலயா போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.