சுரேந்திராவின் கேள்வியை கேட்டு ஆச்சரியப்பட்ட காயத்ரி, அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினார். அப்போது தான் தெரிந்தது, அவர் ஒரு காலத்தில் கல்ப்யன் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் மற்றும் ஓஎஸ் ப்ரோசிஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் சீனியர் அசோசியேட் மற்றும் குவாலிட்டி அனலிஸ்ட்டாக பணியாற்றியவர் என்பது. திட்டங்களை வழிநடத்தி, குழுக்களை சிறப்பாக நிர்வகித்து, தனி ஆளாக பொறுப்புகளை கையாளும் திறனுக்காக தனது மேலாளர்களிடம் சுரேந்திரா பாராட்டுப் பெற்றவர் .
ஆனால், வாழ்க்கையில் விதி வேறு மாதிரி விளையாடியது. குளிர்கால பயணத்தின் போது ஏற்பட்ட பக்கவாதம், அதனுடன் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மருத்துவச் செலவுகள், சுரேந்திராவை ஐடி உலகில் இருந்து விலகி செல்லும்படி கட்டாயப்படுத்தின.
கையில் பணமும் இல்லை, எந்த பாதுகாப்பும் இல்லை. அதனால், அலுவலக மீட்டிங்குகளை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்ட தொடங்கினார். இது தோல்வியின் அடையாளம் இல்லை, மாறாக தன் குடும்பத்தை காப்பாற்றி, வாழ்க்கையின் கடுமையான கட்டத்தில் இருந்து மீண்டு வர அவர் எடுத்த ஒரு துணிச்சலான முடிவு.
“எதிர்பாராத உடல்நல குறைபாடுகள், குறிப்பாக குளிர்கால பயணத்தால் ஏற்பட்ட பக்கவாதம், மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ நெருக்கடியை தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சுரேந்திரா கார்ப்பரேட் உலகிலிருந்து விலகி செல்ல வேண்டியிருந்தது,” என்று காயத்ரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நிதி ஆதாரங்கள் இல்லாததால், சுரேந்திரா தன் குடும்பத்தின் அன்றாட செலவுகளை சமாளிக்க ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். ஆனால் இப்போது, அவர் மீண்டும் தனது பழைய பணிக்கு திரும்பத் தயாராக இருக்கிறார். “குவாலிட்டி அஷூரன்ஸ், ஆபரேஷன்ஸ் சப்போர்ட் அல்லது அவரது திறமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற எந்த ஒரு பேக்கெண்ட் வேலைக்கும் அவர் ஆர்வமாக இருக்கிறார்,” என்று காயத்ரி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். சுரேந்திராவின் புகைப்படத்தையும், தொடர்பு தகவல்களையும் சேர்த்து, அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க உதவும்படி, தனது தொழில்முறை வட்டாரத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பதிவிடப்பட்ட இந்தக் கதை, உடனடியாக வைரலாகி, 120-க்கும் மேற்பட்ட லைக்குகளையும், ஏராளமான நெகிழ்ச்சியான கருத்துகளையும் பெற்றுள்ளது. பலரும் சுரேந்திராவுக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்து வருகின்றனர். தற்போது சுரேந்திராவுக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்போது அவருடைய விதி ஒரே ஒரு சமூக வலைத்தள பதிவால் மாற்றி எழுதப்பட்டுள்ளது.