தமிழக தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத வகையில் பதிவான அதீத வாக்கு சதவிகிதம், ஆளுங்கட்சியான திமுகவின் தூக்கத்தை கெடுத்துள்ளதோடு, அறிவாலய வட்டாரத்தில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து மாவட்ட வாரியான நிலவரங்களை கேட்டறிந்த நிலையில், களத்தில் தெரிந்த மாற்றங்கள் அவருக்குப் பெரும் கவலையை தந்துள்ளன. வழக்கமாக வாக்கு சதவிகிதம் அதிகரிப்பது ஆட்சிக்கு எதிரான அலையாகவே பார்க்கப்படும் என்பதால், “ஆட்சிக்கு எதிரான வாக்குகள் இந்த அளவுக்குக் குவிந்துவிட்டனவா?” என்ற கேள்வி திமுக மேலிடத்தை நிலைகுலையச்செய்திருக்கிறது.
தேர்தல் நாளன்று அறிவாலயத்தில் உள்ள வார் ரூம் மற்றும் பென் நிறுவன அலுவலகத்தில் முதல்வர் முகாமிட்டு நிலவரங்களை கண்காணித்தபோது, அங்கு கிடைத்த தகவல்கள் அவருக்கு சாதகமாக இல்லை. குறிப்பாக, காலை 10 மணிக்கும் முன்னதாகவே பெண்கள் பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்றது முதல்வரை டென்ஷனாக்கியிருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் கைகொடுக்கும் என்று நம்பியிருந்த வேளையில், பெண்களின் இந்தத் திடீர் ஆர்வம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கித் திரும்புகிறதோ என்ற சந்தேகம் முதல்வரிடம் மேலோங்கியது. செந்தில் பாலாஜி போன்ற நம்பிக்கைக்குரிய தளபதிகள் கோவை போன்ற பகுதிகளில் வெற்றி உறுதி என்று உறுதியளித்தும் முதல்வரின் மனம் அமைதியடையவில்லை.
இந்த அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், மதுரையில் வாக்களித்த பிறகு முதல்வரின் அண்ணன் மு.க.அழகிரி அளித்த பேட்டி எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல அமைந்தது. “யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என்று அழகிரி மொட்டையாக கூறியதுடன், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஒரு வார்த்தைகூட சொல்ல மறுத்துவிட்டார். இந்த பேட்டி முதல்வரை தனிப்பட்ட முறையில் பெரும் அப்செட்டிற்கு உள்ளாக்கியுள்ளது.
தேர்தல் முடிந்த பின்னர் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டில், திமுக கூட்டணி 165 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், தேஜ கூட்டணிக்கு 60 இடங்களும், விஜய்யின் தவெக-வுக்கு 10-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இந்த எண்களை பார்த்த பிறகுதான் முதல்வரின் முகத்தில் சற்று பிரகாசம் தெரிந்திருக்கிறது.
இருப்பினும், கள யதார்த்தம் என்னவென்று தெரிந்த சில அரசியல் விமர்சகர்கள், முதல்வரை நிம்மதியாக தூங்க வைப்பதற்காக உளவுத்துறை அதிகாரிகள் “ரிப்போர்ட்” என்ற பெயரில் ஒரு மாய தூக்க மாத்திரையை வழங்கியுள்ளதாகவே கருதுகின்றனர். இந்த அதீத வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக முடியும் என்பது தேர்தல் முடிவு நாளில்தான் வெளிச்சத்திற்கு வரும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
