ஒரு அசாதாரணமான அர்ப்பணிப்பை காட்டும் விதமாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை தயாரிப்பு மேலாளரான 59 வயது ஃபிரெடி கிறிஸ்டியன்சென், கடந்த மே மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும், இன்னும் தனது டென்மார்க் அலுவலகத்திற்கு தினமும் வந்து கொண்டிருக்கிறார்.
டென்மார்க் சட்டத்தின்படி, பணிநீக்கத்திற்கு பிறகு ஆறு மாத நோட்டீஸ் பீரியட் கொண்ட இவர், 23 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள், அவற்றை பயன்படுத்தும் மக்கள், மற்றும் சக ஊழியர்களிடம் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியன்செனின் மைக்ரோசாஃப்ட் உடனான நீண்ட பணி பயணம் எதிர்பாராத விதமாகவே தொடங்கியது. 2002 ஆம் ஆண்டில் நவிஷன் என்ற நிறுவனத்தால் ஒரு தற்காலிக பணிக்காகப் பணியமர்த்தப்பட்டார். ஆனால், சில காலத்திலேயே மைக்ரோசாஃப்ட் அந்த நிறுவனத்தை வாங்கிய பிறகு, அவரது வாழ்க்கை உச்சத்திற்கு சென்றது. அதன்பின் 23 ஆண்டுகளாக விஸ்வாசமாக வேலை செய்த நிலையில் தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும், கிறிஸ்டியன்செனிடம் இன்றும் அலுவலக அணுகல் அட்டை மற்றும் நிறுவன மடிக்கணினி இருக்கின்றன. “நான் இன்னும் எனது அலுவலகத்திற்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன். நான் எனது முன்னாள் குழுவினருடனும் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுக்கு எனது உதவி தேவைப்பட்டால், நான் அவர்களது கேள்விகளுக்கு பதிலளிப்பேன், வழிகாட்டுதல் வழங்குவேன் அல்லது வேறு எந்த வகையிலும் உதவுவேன். அடுத்த மாதம், தற்போதைய ஊழியர்களுக்காக ஒரு மீட்டிங் நடத்த உள்ளேன். என்னுடைய அனுபவத்தை அவர்களிடம் பகிர்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்டபோது தான் நிம்மதியாக உணர்ந்ததாக கிறிஸ்டியன்சென் தெரிவித்தார். “நான் இந்த வேலையை மிகவும் நிறைவாக கண்டேன். ஆனால் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கும் கனவுகளை காண ஆரம்பித்தேன். இந்த ஆண்டு மே மாதம் ஒரு நாள் காலை, எனது மேலாளருடன் ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு எனக்கு அழைப்பு வந்தது. உடனே என் மனைவியிடம், நான் பணிநீக்கம் செய்யப்பட போகிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினேன். என் மனைவி வருத்தப்படுவார் என்று நினைத்தேன், ஆனால் உண்மையில், அவருக்கு இந்த தகவல் நிம்மதியாகவே இருந்தது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அடுத்த வாரம் தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் குறிப்பிடத்தக்க அளவில் பணிநீக்கங்களை செய்யத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.