இன்று நான் நாளை நீ.. ரூ.1 கோடி சம்பளம் வாங்கியவர் இன்று உணவு டெலிவரிபாய்.. காரணம் AI வளர்ச்சி..!

  ஒரு காலத்தில் மெட்டாவர்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஷான், தற்போது வேலையின்றி, உணவுகளை டெலிவரி செய்து பிழைப்பு நடத்துவதாக தெரிவித்துள்ளார். இது பெரும்…

AI

 

ஒரு காலத்தில் மெட்டாவர்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஷான், தற்போது வேலையின்றி, உணவுகளை டெலிவரி செய்து பிழைப்பு நடத்துவதாக தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்டாவெர்ஸ் துறையில் 20 வருட அனுபவம் கொண்டிருந்த ஷான், AI தொழில்நுட்பத்தால் தனது வேலையை இழந்ததாக கூறியுள்ளார். 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் விண்ணப்பித்தும், பத்துக்கும் குறைவான நேர்காணல் அழைப்புகளே வந்துள்ளதாகவும், அதுவும் பெரும்பாலான அழைப்புகள் AI ரோபோக்கள் மூலம் வந்ததால் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஷான் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நான் AI தொழில்நுட்பத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்தேன். ஆனால், அதுவே எனக்கு எமனாக மாறிவிட்டது,” என்று அவர் கூறினார். “AI தொழில்நுட்பத்தை ஆதரித்தாலும், தனிப்பட்ட முறையில் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த தொழில்நுட்பம் மனிதர்களை வேலையில் இருந்து நீக்கவே பெரும்பாலும் பயன்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இன்று நான், நாளை இன்னும் எத்தனையோ பேர் தங்கள் வேலைகளை இழப்பார்கள்,” என்று ஷான் எச்சரித்தார்.

மெட்டாவெர்ஸ் உட்பட பல பிரபல நிறுவனங்கள் தற்போது AI மூலம் தங்கள் பணிகளை மிக எளிதாக செய்யத் தொடங்கிவிட்டன என்றும், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதை விட செலவுகளைக் குறைப்பதற்கே அனைத்து நிறுவனங்களும் முன்னுரிமை அளிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மனிதநேயத்தை பார்ப்பதில்லை என்றும், முழுக்க முழுக்க லாப நோக்கத்தை மட்டுமே பார்ப்பதால், தொழில்நுட்பம் மூலம் ஆட்குறைப்பு செய்வதில் தான் அக்கறை காட்டுகின்றன என்றும் ஷான் குறிப்பிட்டார்.

AI தொழில்நுட்பத்தின் கட்டுப்பாடு இல்லாத வளர்ச்சி கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிறது என்பதற்கு ஷான் ஒரு உதாரணமாக இருக்கும் நிலையில், நாளை இன்னும் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்று வல்லுனர்கள் கூறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.