கணவன் மனைவி தனித்தனி பெட்ரூமில் படுத்தால் சண்டையே வராது: பிரபல பெண் எழுத்தாளர்..!

  கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒரே படுக்கையில் தூங்க வேண்டும் என்பது உலக வழக்கமாக இருந்தாலும், இருதரப்பின் ஆரோக்கியமான உறவுக்க்கு இருவரும் தனித்தனி படுக்கையறைகளில் தூங்க வேண்டும் என பிரிட்டிஷ் எழுத்தாளரும், போட்காஸ்டருமான…

bedroom

 

கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒரே படுக்கையில் தூங்க வேண்டும் என்பது உலக வழக்கமாக இருந்தாலும், இருதரப்பின் ஆரோக்கியமான உறவுக்க்கு இருவரும் தனித்தனி படுக்கையறைகளில் தூங்க வேண்டும் என பிரிட்டிஷ் எழுத்தாளரும், போட்காஸ்டருமான சோஃபி பலுச் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த எழுத்தாளர் கூறியபோது, ‘தனது கணவரிடமிருந்து தனிப் படுக்கையில் தூங்குவதாக சொன்னபோது, மக்கள் பெரும்பாலும் ஆச்சரியப்படுகிறார்கள். நம் கலாச்சாரத்தில், கணவன் மனைவி ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்வது, இரவு வணக்கம் சொல்லி அணைத்து கொள்வது எல்லாம் சகஜம். ஆனால், நிம்மதியான, தடையில்லாத தூக்கத்தை எத்தனை பேர் அனுபவிக்கிறார்கள்?

நான் என் கணவருடன் 14 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கிறேன். நாங்கள் பெரும்பாலான காலத்தை தனித்தனியாக தூங்கியிருக்கிறோம். இது எங்கள் உறவை மேலும் பலப்படுத்தியிருக்கிறது என்கிறார் சோஃபி.

ஆரம்பத்தில் சோஃபிக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தூக்கம் வரும். ஒரு விடுதியில் தீ எச்சரிக்கை ஒலித்தாலும், மது அருந்தாமல் கூட அவரால் தூங்க முடிந்தது. ஆனால், அவரது கணவர் அப்படியில்லை. அவருக்கு தூங்குவதில் பல சிரமங்கள். அடிக்கடி விழித்து கொள்வார், சின்ன சத்தத்திற்கு கூட தூக்கம் கலைந்துவிடும், மேலும் சத்தமாக குறட்டை விடுவார்.

அவர்கள் முதன்முதலில் ஒன்றாக வாழ தொடங்கியபோது, இந்த காரணங்களால் பல சண்டைகள் வந்தன. அவரது அமைதியற்ற தூக்கம் சோஃபியையும் எழுப்பிவிடும். இதனால், காலையில் இருவரும் சோர்வாகவும், எரிச்சலுடனும் இருப்பார்கள்.

இதன் பின்னர் தான் அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தாலும், ஒன்றாக நேரத்தை செலவிடுவதை ரசித்தாலும், தூங்கும் விஷயத்தில் இருவரின் தேவைகளும் வேறுபட்டதே சண்டைகளுக்கு காரணம் என்பதை உணர்ந்தனர். அதனால், தனி அறைகளிலும், தனி படுக்கைகளிலும் தூங்க முடிவு செய்தனர்.

14 ஆண்டுகள் ஒன்றாக இருந்த பிறகு, இரண்டு குழந்தைகளுடன், சோஃபி பலுச் தனது தூக்கத்திற்கு முன்னுரிமை அளித்தது தான், தங்கள் திருமணத்தை வலுப்படுத்தியுள்ளது என்று உறுதியாக நம்புகிறார். அவர்கள் இப்போதும் மாலையில் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்கள், காலையில் சேர்ந்து டீ குடிக்கிறார்கள். ஆனால், இரவில் தனித்தனியாக தூங்குகிறார்கள்.

தனித்தனியாக தூங்குவது தங்கள் உறவை பாதிக்கிறதா என்று கேட்டபோது, சோஃபி பலுச் “ஆம், ஆனால் அது நேர்மறையான பாதிப்பு!” என்று பதிலளிக்கிறார். தனி அறைகளில் தூங்குவது ஏன் எதிர்மறையாக பார்க்கப்படுகிறது என்று அவருக்கு புரியவில்லையாம். “ஒரே படுக்கையில் சண்டையிட்டுக்கொள்வதை விட, தனித்தனியாக நன்றாக தூங்குவது எவ்வளவோ சிறந்தது” என்று அவர் வலியுறுத்துகிறார். ஒரு ஆரோக்கியமான திருமணத்தில், தனிப்பட்ட இடத்தையும், தேவைகளையும் மதித்து, ஒன்றாக வளர்வதுதான் முக்கியம் என்பதே சோஃபியின் கருத்து. இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருடைய பதிவை படித்ததும் ஒருவர் ‘மெளன ராகம்’ படத்தில் இடம்பெற்ற ‘மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர எண்ணமில்லையோ’ என்ற பாடலை கமெண்டில் குறிப்பிட்டுள்ளார்.