கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி மீது புகார் அளித்த இளைஞர் திடீர் மாயம்.. என்ன ஆனார்?

  கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி சர்மிஸ்தா பனோலி என்பவர், தனது சமூக வலைதளத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எந்தவித கருத்தும் வெளியிடாமல் இருந்த பிரபல பாலிவுட் நடிகர்களை விமர்சனம் செய்த நிலையில்,…

 

கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி சர்மிஸ்தா பனோலி என்பவர், தனது சமூக வலைதளத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எந்தவித கருத்தும் வெளியிடாமல் இருந்த பிரபல பாலிவுட் நடிகர்களை விமர்சனம் செய்த நிலையில், அவர் வெறுப்பு பேச்சு பேசியதாக கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் சிறையில் இருக்கும் நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திடீரென சர்மிஸ்தா பனோலி மீது புகார் அளித்த இளைஞர் வஜஹத் கான் என்பவரை காணவில்லை என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டக் கல்லூரி மாணவி சர்மிஸ்தா பனோலி வெறுப்பு பேச்சு பதிவு செய்துள்ளதாக புகார் அளித்தவர் வஜஹத் கான் என்பவர் கடந்த ஞாயிறு முதல் காணவில்லை என்றும், தங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், தனது மகன் ஒரு மதச்சார்பற்ற மனிதர் என்றும், இந்துமதத்தை அவமதிக்கும் வகையில் எந்தவித பதிவையும் அவர் செய்ய மாட்டார் என்றும், அவரது சமூக வலைதளத்தில் வந்த சில சர்ச்சைக்குரிய பதிவுகள் ஹேக் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தனது மகன் மன உளைச்சலில் இருந்ததாகவும், ஏராளமான மிரட்டல்கள் வந்ததாகவும், நாகரிகமற்ற வார்த்தைகளில் பலர் அவரை திட்டியதாகவும் அவரது தந்தை தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பஜ்மத் கானுக்கு எதிராக ‘ஸ்ரீராம் பரிஷத்’ என்னும் அமைப்பு புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், வஜஹத் கான் சமூக ஊடகங்களில் இந்துமதம் குறித்து அவமதிக்கும் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“கோமியம் பழகும் மக்கள்” என்பது உள்பட பல வார்த்தைகளை பயன்படுத்தி, இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், இந்து கோவில்கள், திருவிழாக்கள், மத சடங்குகளை தாழ்வாக பேசியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு மதங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் அவரது பதிவுகள் இருப்பதால், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டக் கல்லூரி மாணவி மீது புகார் அளித்த வஜஹத் கான் திடீரென காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.