திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அங்கு பத்திரிகையாளர்கள் இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு அவர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஒரு நாடாளுமன்ற குழு, உலகின் பல நாடுகளுக்கு சென்று தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று கூறி வருகிறது. குறிப்பாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கம் அளிக்க இந்த குழுக்கள் அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஏற்கனவே சில நாடுகளுக்கு சென்ற கனிமொழி தலைமையிலான குழு தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு, “எங்களைப் பொருத்தவரை ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே எங்களின் தேசிய மொழி. பல்வேறு மொழிகள் இருந்தாலும், நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்,” என்று பதில் கூறியுள்ளார்.
மேலும், வெளிநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு வகிக்க முடியும் என்று கூறிய அவர், “இந்தியாவுக்கு முதலில் அமைதி முக்கியம். இதை வெளிநாட்டில் உள்ளவர்கள் இடம் புரிய வைக்கும் சக்தி உங்களிடம் தான் இருக்கிறது. எங்களது விடுதலை போராட்டமே அகிம்சையை அடிப்படையாக கொண்டது. மக்கள் மனதில் உருவாகும் கருத்துக்களின் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்று கூறினார்.
மேலும், “எங்கள் நாட்டில் இன்னும் நிறைய செய்வதற்கான வேலைகள் உள்ளன. ஆனால் சில நேரங்களில் தீவிரவாதம், போர் என்ற தேவையற்ற பிரச்சனைகளை கையாள வேண்டிய நிலை உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தியா பாதுகாப்பான நாடு என்பதை நாங்கள் உறுதி செய்ய போகிறோம். எதிரிகள் என்ன முயற்சி செய்தாலும், நம்முடைய வளர்ச்சியை தடுக்க முடியாது. காஷ்மீர் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டியதை நாங்கள் உறுதி செய்யப் போகிறோம்,” என்று தெரிவித்தார் கனிமொழி.
கனிமொழி தலைமையிலான இந்த குழுவில் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராஜீவ் குமார் ராய், பாஜகவைச் சேர்ந்த பிரஜேஷ் சௌட்டா, ஆம் ஆத்மி கட்சியின் அசோக் மித்தல், ஆர்.ஜே.டியின் பிரேம் சந்த் குப்தா, முன்னாள் துறவி மன்ஜீவ் சிங் பூரி ஆகியோர் உள்ளனர். இந்த குழு ஸ்பெயின் உள்பட 5 நாடுகள் பயணத்தை முடித்துவிட்டதால் இந்தியா திரும்ப உள்ளது.