ஏரிகளில் அடுக்குமாடி கட்டும் காலம் முடிந்துவிட்டது.. இனி ஏரியையே வீடாக மாற்றலாம்.. ரெடிட் பயனரின் ஹவுஸ்போட் ஐடியா.. இந்தியாவில் சட்டப்படி சாத்தியமா?

  இந்தியாவில் ரியல் எஸ்டேட் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டன. இதனால், ஒரு புதிய வீடு வாங்குவது அல்லது சொந்தமாக வீடு கட்டி வாழ்வது என்பது பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. நடுத்தர குடும்பங்கள் கூட, தரமான,…

houseboats

 

இந்தியாவில் ரியல் எஸ்டேட் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டன. இதனால், ஒரு புதிய வீடு வாங்குவது அல்லது சொந்தமாக வீடு கட்டி வாழ்வது என்பது பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. நடுத்தர குடும்பங்கள் கூட, தரமான, வீடுகளை தங்கள் பட்ஜெட்டில் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்திய ஒரு ரெடிட் பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதில், “ஒருவர் ஹவுஸ்போட்டில் சட்டப்பூர்வமாக வசிக்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த ரெடிட் பயனர், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முடியாத விரக்தியில், மிதக்கும் வீடான ஹவுஸ்போட்டில் வாழும் மாற்று யோசனையை முன்வைத்துள்ளார். “பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என எந்த இந்திய நகரங்களிலும் என்னால் பிளாட் வாங்க முடியவில்லை. எனக்கு வயதாகிவிட்டதால், இ.எம்.ஐ செலுத்தும் வயதில் நான் இல்லை. எனவே சமையலறை, குளியலறை மற்றும் இரண்டு அறைகளுடன் கூடிய ஒரு சிறிய படகை வாடகைக்கு எடுக்க அல்லது விலைக்கு வாங்க விரும்புகிறேன். அதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கண்ட நகரங்களில் பல ஏரிகள் இருப்பதை குறிப்பிட்டு, அந்த ஏரிகளிலோ அல்லது கடலுக்கு அருகிலோ படகுகளை நிறுத்தி வாழ விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். உயர்ந்து வரும் வீடுகளின் விலைகள் என்னை ரொம்பவே வெறுப்படைய செய்துவிட்டன. ஹவுஸ்போட்கள் 15 முதல் 30 லட்சம் வரை செலவாகும். அதுமட்டுமல்லாமல், ஒருவேளை வெள்ளம் வந்தாலும், நான் மிதந்துகொண்டேதான் இருப்பேன்,” என்று தனது பதிவை அவர் முடித்திருக்கிறார்.

இந்த பதிவு உடனடியாக இணையத்தில் வைரலாக பரவி, பயனர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியது. ஒருவர், “நகரத்தின் புறநகர் பகுதிகளில் ஒரு வீடு வாங்க முடியாதா? படகு மாதிரி வேடிக்கையாக இருக்காதுதான், ஆனால் குறைந்தபட்சம் அது நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும்,” என்று யோசனை தெரிவித்தார். மற்றொருவர், “சீரியஸாக சொல்ல வேண்டுமென்றால், நான் ஒரு கேரவன் வாங்கி அதில் தங்குவது பற்றி யோசித்து வருகிறேன்; நகரத்தை சுற்றிச் செல்வதற்கும், போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் இருப்பதற்கும் இது எளிதாக இருக்கும்,” என்று தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு பயனர், கிராமப்புறங்களில் வீடு வாங்குவது குறித்து யோசித்தாரா என்று கேட்டுள்ளார். “கிராமப்புறங்களில், உதாரணத்திற்கு குஜராத்தின் பாடன் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், சுமார் 800-900 சதுர அடியுள்ள நிலத்துடன் கூடிய ஒரு தனி வீட்டை 10-12 லட்ச ரூபாய்க்கு பெறலாம். இந்தியாவில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. வீட்டின் விலை மட்டுமே உங்கள் கவலையாக இருந்தால், மெட்ரோ நகரங்களின் வசதிகள் கிடைக்காவிட்டாலும், இது ஒரு நல்ல மாற்று. முக்கிய நகரங்களை போல சுகாதார வசதிகள் இருக்காது என்பது மட்டுமே இதில் ஒரு குறை,” என்று ஒரு விரிவான கருத்தை அவர் முன்வைத்தார்.

இதற்கு மாறாக, சிலர் பட்ஜெட்டுக்குள் வேறு நகரங்களில் வீடு வாங்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். “அந்த பட்ஜெட்டில் புனே போன்ற நகரங்களில் வீடுகளை வாங்கலாம். இன்னும் 5-10 லட்சம் சேர்த்தால், நகரத்திலேயே ஒரு 1BHK வீட்டை வாங்கலாம். புறநகர்ப் பகுதிகளுக்கு சென்றால், நல்ல வியூவுடன் ஒரு 2BHK வீடும் கிடைக்க வாய்ப்புள்ளது,” என்று ஒரு பயனர் ஆலோசனை வழங்கினார்.

ஹவுஸ்போட்டில் வாழும் ரெடிட் பயனரின் யோசனை சிலருக்கு கற்பனையாக தோன்றினாலும், மற்றவர்கள் இந்த திட்டத்தின் நடைமுறை சாத்தியமற்ற தன்மையை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவில், இத்தகைய குடியிருப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், துறைமுக வசதிகள், கழிவு மேலாண்மை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளை ஹவுஸ்போட்டிற்கு பெறுவதில் பல சவால்கள் உள்ளன என்று தெரிவித்தனர்.

இப்போது தான் ஏரிகளை எல்லாம் பிளாட் போட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி வருகிறார்களே, இன்னும் சில வருடங்கள் கழித்து நீங்கள் ஹவுஸ்போட்டை எங்கே நிறுத்துவீர்கள் என ஒருவர் காமெடியாக பதில் அளித்துள்ளார்.