சமீபகாலமாக மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினரிடையே இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற பல காரணங்கள் மாரடைப்பு அதிகரிப்புக்கு பங்களித்துள்ளன. இந்நிலையில், இந்திய நிறுவனத்தின் சி.இ.ஓ ஒருவர் தனக்கு ஏற்பட்ட மாரடைப்பு அச்சுறுத்தல் குறித்து பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
ஐ.ஐ.எம் அகமதாபாத் முன்னாள் மாணவரான ஹர்ஷ் மேக்வான், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், தான் “ஆபத்தான நிலைக்கு மிக அருகில் வந்துவிட்டதாகவும்”, ஒரு சில நிமிடங்களிலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர தனது பதிவில் ” என் நெஞ்சில் ஒரு கடுமையான வலி, நெஞ்சை நசுக்கும் அளவுக்கு வலி இருந்தது. என் இடது கை மரத்து போனது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது, வியர்த்தது, தடுமாறிப் போனேன். சில நிமிடங்களுக்குள் நான் மருத்துவமனைக்கு விரைந்தேன். அதை தொடர்ந்து ஈசிஜி மற்றும் தொடர் சிகிச்சை முறைகள் நடந்தது. அதன்பின் ஒருவழியாக உயிர் பிழைத்தேன் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் “உங்கள் இதயம் ஒரு இயந்திரம் அல்ல. தேவையான அளவு ஓய்வெடுங்கள். தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குங்கள். குறிப்பாக தினமும் வாக்கிங் செல்லுங்கள். தினமும் சில மணி நேரமாவது உங்கள் போனை அணைத்து விடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
மேக்வான் தான் தற்போது குணமடைந்து வருவதாக தெரிவித்த நிலையில், அவரது பதிவுக்கு இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது பின்தொடர்பவர்கள் பலர் அக்கறை தெரிவித்து, ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அவரது பதிவுக்கு பல பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் நேர்மாறாக சில கிண்டலான கமெண்ட்களும் பதிவாகின. ஒரு ரெடிட் பயனர்”மற்ற நிறுவனர்களின் சி.இ.ஓக்களுக்கு இந்த பதிவை அனுப்ப போகிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். பொதுவாக ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ தான் மற்ற ஊழியர்களை மிரட்டுவார்கள், விரட்டுவார்கள், அவர்களால் தான் மற்றவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு, சி.இ.ஓவுக்கே மாரடைப்பு எப்படி வரும்? என்றும் சிலர் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், விமர்சனங்கள் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு மத்தியில், சி.இ.ஓ-வின் இந்த பதிவு, பணிபுரியும் நபர்கள் தங்கள் வாழ்க்கை முறை மற்றும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை நிச்சயம் வலியுறுத்துகிறது.
https://www.instagram.com/p/DLXrQEvN264/?utm_source=ig_web_copy_link