ஒரு அதிரடியான மறுசீரமைப்பு நடவடிக்கையாக, அமேசான் நிறுவனம் சுமார் 350,000 ஊழியர்களை சில குறிப்பிட்ட தலைமை அலுவலக நகரங்களுக்கு மாறுமாறு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு மாற மறுத்தால், எந்தவித இழப்பீடும் இல்லாமல் வேலையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது பெரும் சிக்கலில் உள்ளனர். அமேசானின் முக்கியச் செயல்பாட்டு மையங்களான சியாட்டில், ஆர்லிங்டன் அல்லது வாஷிங்டன், டி.சி. ஆகிய நகரங்களுக்கு மாற வேண்டும்.
அப்படி மாற மறுக்கும் ஊழியர்கள் வேலையில் இருந்து தாராளமாக நின்று கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படாது என்றும் அமேசான் அறிவித்துள்ளது. தனிப்பட்ட, நிதி அல்லது குடும்பக்காரணங்களால் இடமாற்றம் செய்ய முடியாத ஊழியர்களிடையே இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு அனுபவமிக்க திறமைகளை இழப்பதோடு, ஊழியர்களின் மன உறுதியையும் வெகுவாக குறைக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அமேசானின் இந்த நடவடிக்கை அதன் உலகளாவிய கார்ப்பரேட் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட உத்தரவுகளில் இதுதான் அதிகபட்ச ஊழியர்களை பாதிக்கும் மிகப் பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை நீண்டகால வணிக இலக்குகளுக்கு தேவை என்று அமேசான் கூறினாலும், இது பெரும் பணி விலகல்களுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
61 வயதான அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் சமீபத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்காக 55 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.470 கோடிக்கு அதிகமாக செலவு செய்து உள்ளார். ஆனால் பணியிட மாற்றத்தை மறுக்கும் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினால் ஒரு பைசா கூட இழப்பீடு இல்லை என்று கூறுவது மனசாட்சியே இல்லாத ஒரு செயல் என்று சமூக வலைதளங்களில் அமேசான் நிறுவனர் மீது கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
’ஊழியர்கள் இல்லை என்றால் ஒரு நிறுவனமே இல்லை, ஊழியர்களின் மனது குளிர்ந்தால் தான் நிறுவனம் வளர்ச்சியடைய முடியும். ஊழியர்களை மன கஷ்டப்பட்டு விட்டு ஒரு நிறுவனம் வளர்ச்சி அடையலாம் என்றால், அது சாத்தியமே இல்லை’ என்று பல இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.