பூகம்பம் வந்தால் கூட… பதறாது நெஞ்சம் எனது.. நிலநடுக்கமா? அணு ஆயுத சோதனையா? ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சந்தேகம்..!

நேற்று வடக்கு ஈரானின் செம்னான் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் செம்னானுக்கு தென்மேற்கே 27 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.…

earthquake

நேற்று வடக்கு ஈரானின் செம்னான் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் செம்னானுக்கு தென்மேற்கே 27 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம், “ஈரான் அணு ஆயுத சோதனை செய்ததா?” என்ற புதிய சந்தேக கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், இது ஒரு விண்வெளி மற்றும் ஏவுகணை தளங்களை கொண்ட நகரத்திற்கு மிக அருகில் ஏற்பட்டிருப்பதால், கவலையும் அதிகரித்துள்ளது. ஈரானின் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் செம்னான் விண்வெளி மையம் (Semnan Space Center) மற்றும் செம்னான் ஏவுகணைத் தளம் (Semnan Missile Complex) ஆகியவை அங்குதான் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஒன்பதாவது நாளாக தீவிரமடைந்து வரும் மோதலுக்கு மத்தியில் வந்துள்ளது. அணுசக்தித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன்” என்று ஈரான் கூறிய மறுநாள் அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும், குறைந்தபட்ச சேதம் மட்டுமே ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. மோதல் நிறைந்த இந்த பகுதி, அரேபிய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் இணையும் ஆல்பைன்-இமயமலை நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, ஈரானில் ஆண்டுக்கு சராசரியாக 2,100 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதில் 15 முதல் 16 நிலநடுக்கங்கள் 5.0 ரிக்டர் அல்லது அதற்கு மேல் பதிவாகும். 2006 மற்றும் 2015-க்கு இடையில், அந்த நாடு சுமார் 96,000 நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது.

அணுசக்தி நடவடிக்கைகளின்போது ஏற்படும் நிலத்தடி வெடிப்புகள், வெடிப்புக்கு அருகிலுள்ள டெக்டோனிக் அழுத்தத்தை வெளியிடுவதன் மூலம் நிலநடுக்கங்களை தூண்டலாம். இருப்பினும், நில அதிர்வு நிபுணர்கள், வெடிப்புகளுக்கும் இயற்கையான நிலநடுக்கங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்வதன் மூலம் கண்டறிய முடியும். தற்போதைய நில அதிர்வு தரவுகள், இந்த நிலநடுக்கம் ஒரு இயற்கையான நிகழ்வுதான் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன என்று கூறியுள்ளனர்..

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் விரிவான அணு ஆயுத சோதனை தடை அமைப்பு மற்றும் சுயாதீன நில அதிர்வு நிபுணர்களின் ஆய்வுகள், அணு ஆயுத சோதனைகள் அல்லது இராணுவத்தால் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் குறித்த ஊகங்களை நிராகரித்துள்ளன. அதாவது, இது மனிதனால் உருவாக்கப்பட்ட வெடிப்பு அல்ல, இயற்கையான நிலநடுக்கமே என்று வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.