செயற்கை நுண்ணறிவு நம் வேலை செய்யும் விதத்தையும், படைப்புத்திறனையும், பிரச்சனைகளை தீர்க்கும் முறைகளையும் மாற்றியமைத்து வரும் இக்காலத்தில், ஒரு பெண் தனது தனிப்பட்ட பெரும் கடன் சுமையிலிருந்து மீள AI-யை பயன்படுத்தியுள்ளார்.
புத்திசாலித்தனமான கருவிகள், சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது, அன்றாட வாழ்வில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு அவரது கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் ஆலன் என்ற பெண், தனது கிரெடிட் கார்டு கடனை அடைக்க AI-யை பயன்படுத்தியுள்ளார். 35 வயதான இவர் ஒரு ரியல் எஸ்டேட் முகவர். இவர் தனது ரூ.19.7 லட்சம் கிரெடிட் கார்டு பில்லில் பாதிக்கும் மேல் அடைக்க ChatGPTஐ பயன்படுத்தியுள்ளார்.
ஜெனிஃபருக்கு நல்ல வருமானம் இருந்தபோதிலும், அவருக்கு நிதி அறிவு போதவில்லை. அவரது மகள் பிறந்த பிறகும், தொடர்ச்சியான மருத்துவ அவசரநிலைகளாலும், அவர் கிரெடிட் கார்டுகளை அதிகமாக நம்பியிருந்தார். அவர் ஆடம்பரமாக வாழவில்லை, ஆனால் அவரது தேவைகளை பூர்த்தி செய்யவே சிரமப்பட்டார். மேலும் அவர் கடன் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையும் கவனிக்கவில்லை.
இந்த நிலையில் தான் தனது நிதி நிலைமையை கட்டுப்படுத்த உறுதியாக இருந்த ஜெனிஃபர், ChatGPTஐ பயன்படுத்தி 30 நாட்களும் என்னென்ன செலவு செய்ய வேண்டும் என்ற அறிவுரையை பெற்றார். ஒவ்வொரு நாளும், AI சில ஐடியாக்களை பரிந்துரைத்தது. பயன்படுத்தப்படாத சந்தாக்களை ரத்து செய்வது, ஒரு துணை தொழில் தொடங்குவது மற்றும் மறந்துபோன கணக்குகளை மதிப்பாய்வு செய்வது போன்றவை இதில் அடங்கும்.
அப்போது தான் ஜெனிஃபர் தனது பழைய ப்ரோக்கரேஜ் கணக்கில் ரூ. 8.5 லட்சம் இருப்பதை ChatGPT மூலம் அறிந்தார். இதை அவர் நீண்ட காலமாக மறந்துவிட்டிருந்தார். மற்றொரு நாளில், அவர் ChatGPT ஐப் பயன்படுத்தி, தனது சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே உணவு திட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் அவரது மளிகைக்கடை பில்லில் மாதம் ரூ.50,000 வரை குறைத்தார்.
30 நாட்களின் முடிவில், ஜெனிஃபர் ரூ.10.3 லட்சம் கடனை அடைத்திருந்தார். இது அவரது மொத்த கடனில் பாதிக்கும் மேலாகும். ஜெனிஃபர் இப்போது தனது மீதமுள்ள கடனை இன்னொரு 30 நாளில் முடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்பின் அவர் கடனே இல்லாமல் நிம்மதியாக வாழ்வார் என்றால் அதற்கு ChatGPT ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.