உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், 23 வயது இளைஞர் ஒருவர், உறங்கிகொண்டிருந்த தனது காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குத்லா கிராமத்தை சேர்ந்த தேவன்ஷ் யாதவ் என்ற அந்த இளைஞன், தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை பயன்படுத்தி இந்த கொடூர குற்றத்தைச் செய்துள்ளார். தன் வீட்டின் கூரை வழியாக உள்ளே நுழைந்து, 21 வயதான தீப்தி தனது இளைய சகோதரியுடன் தூங்கிகொண்டிருந்த அறைக்கு சென்று, அவளது தலையில் சுட்டு கொன்றான். அதன் பிறகு, அவன் வீட்டிலிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள ஒரு குளத்தில் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.
தேவன்ஷ், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மஹிபால் சிங் யாதவின் மகன். 12 ஆம் வகுப்பு வரை படித்திருந்த அவன், தனது தந்தையுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தான். தீப்தி, இளங்கலை அறிவியல் இறுதி ஆண்டு மாணவி. அவளது தந்தை அசோக் பால், மின்சார துறையில் லைன்மேனாக பணிபுரிந்து வருகிறார்.
தீப்தியும் தேவன்ஷும் கடந்த சில காலமாகக் காதலித்து வந்துள்ளனர். தீப்தியின் குடும்பத்திற்கு இது தெரிந்ததும், அவர்கள் தங்கள் மகளை வேறொருவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை ஒரு தனியார் கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் காதலித்த தீப்திக்கு நிச்சயதார்த்தம் என தெரிந்ததும், தேவன்ஷ் மாப்பிள்ளையின் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. தீப்தியை திருமணம் செய்ய வேண்டாம் என்று தேவனேஷ் மிரட்டியதால் இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்சனை பெரிதாகியது.
இதுகுறித்து அந்த கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. அதில் இரு குடும்பத்தினரும் கலந்துகொண்டனர், மணமகனும் இந்த பஞ்சாயத்தில் இருந்தார். பஞ்சாயத்தார் கேட்டு கொண்டதால் தேவன்ஷு மன்னிப்புக் கேட்டு, தீப்தியுடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்வதாகக் கூறினார். இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக நம்பி குடும்பத்தினர் பஞ்சாயத்தை விட்டு சென்றனர்.
ஆனால், இரவில், தேவன்ஷு வீட்டிற்கு சென்று, தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சுல்தான்பூர் கிராமத்திற்கு சென்றான். அவன் தீப்தியின் வீட்டிற்கு கூரை வழியாக நுழைந்து, அவள் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு நேராக சென்றான். அவளை நெருக்கமான தூரத்தில் சுட்டு கொன்றுவிட்டு, பின்னர் குளத்திற்கு சென்று தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். போலீசார் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக் கூடுகளை மீட்டெடுத்தனர், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்திற்கு பிறகு தேவன்ஷுவின் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டதாகவும், போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.