மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. பள்ளி சீருடை போல் ஆடை கட்டுப்பாடு விதித்த ஐடி நிறுவனம்.. நெட்டிசன்கள் விளாசல்..!

  ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பள்ளிச் சீருடை விதிமுறைகளை போல கண்டிப்பான ஆடை விதிமுறைகளை அமல்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்போது வைரலாகி வரும் ஒரு சமூக வலைத்தள பதிவின்படி, அந்த நிறுவனம்…

dress code

 

ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பள்ளிச் சீருடை விதிமுறைகளை போல கண்டிப்பான ஆடை விதிமுறைகளை அமல்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்போது வைரலாகி வரும் ஒரு சமூக வலைத்தள பதிவின்படி, அந்த நிறுவனம் தனது ஊழியர்களை சுடிதார் சூட்களை ஷால் ‘பின்’ செய்து அணிவது, சட்டைகளை ‘டக்-இன்’ செய்வது, மற்றும் ரிப்பனுடன் தலைமுடியை நேர்த்தியாக கட்டுவது போன்ற கடுமையான விதிமுறைகளை பின்பற்ற சொல்லியுள்ளது. இந்த செயல்கள் இணையத்தில் விமர்சனங்களை ஈர்த்துள்ளன.

“இது என்ன வகையான விதி?” என்ற தலைப்பில், ரெடிட்டில் பகிரப்பட்ட அந்த பதிவில், “என் நண்பருக்கு ஒரு வேலை வாய்ப்பு கடிதம் வந்தது, அதை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சட்டைகளை டக்-இன் செய்வதற்கோ அல்லது ஷாலை பின் செய்வதற்கோ, அவர்கள் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த பதிவில், டெவலப்பர் பதவிக்கான மாத சம்பளம் ₹12,000 குறிப்பிடப்பட்டிருந்த வேலைவாய்ப்பு கடிதத்தின் ஸ்கிரீன்ஷாட்டும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் “ஆடை விதிமுறை மற்றும் அலங்காரம்” என்ற தலைப்பில், நிறுவனம் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கான கண்டிப்பான ஆடை விதிகளை வலியுறுத்தியிருந்தது.

ஆண்களுக்கு, ஃபார்மல் உடைகள் மற்றும் டக்-இன் செய்யப்பட்ட சட்டைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. டி-ஷர்ட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜீன்ஸ் அணிய அனுமதிக்கப்பட்டாலும், டக்-இன் செய்யப்பட்ட சட்டையுடன் அணிய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. “தாடி நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பெண்களுக்கு இன்னும் கடுமையான விதிகள் உள்ளன. அவர்கள் குர்தா மற்றும் சுடிதாருடன் ஷால் அணிய மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதிலும், ஷால் “சரியாக பின் செய்யப்பட்டிருக்க வேண்டும்.”

“சுடிதாரை சரியாக பின் செய்யப்பட்ட ஷாலுடன் அணிய வேண்டும். தளர்வான/திறந்த முடிக்கு அனுமதி இல்லை. தலைமுடி ரிப்பனால் கட்டப்பட்டு, நேர்த்தியாக பராமரிக்கப்பட வேண்டும். ஆடை எப்போதும் நேர்த்தியாகவும், கண்ணியமாகவும், பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்” என்று பெண்களுக்கான கொள்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் பதிவு வைரலானதும், சமூக வலைத்தள பயனர்கள் இந்த விதிகளை பள்ளிகளில் உள்ள கண்டிப்பான ஆடை விதிமுறைகளுடன் ஒப்பிட தொடங்கினர். ஒரு பயனர் கேலியாக, “மீண்டும் பள்ளிக்கு போகலாம் என தங்கர்பச்சான் இயக்கிய ‘பள்ளிக்கூடம்’ பாட்டை பாடி கேலி செய்தார்.

இன்னொருவர் ஊழியர்கள் தாழ்வாரத்தில் ஓடக்கூடாது, ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி நிலவ வேண்டும் என்று குறிப்பிட மறந்துவிட்டார்கள்” என்று பதிவிட்டார்.

மற்றொருவர், “இது ‘தொழில்முறை’ ஆடை என்றால், ஏன் அவர்கள் பெண்களை ஃபார்மல் உடைகள் அணிய சொல்லக் கூடாது? இது தொழில்முறை பற்றியது அல்ல, இது முற்றிலும் ஒரு பாலினப் பாகுபாடு” என்று எழுதினார். “இது எந்தப் பள்ளி? அவர்கள் இடைக்கால சேர்க்கை நடத்துகிறார்களா?” என்று மற்றொரு பயனர், நிறுவனம் கடைப்பிடிக்கும் ‘கண்ணியம்’ குறித்து வியப்புடன் கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் சிலர் இந்த விதிமுறைகளை வரவேற்றுள்ளனர். நாகரீகம் என்ற பெயரில் ஆபாசமான உடைகளை அணிந்து வருவது தற்போது பேஷனாகி வருகிறது. வேலை பார்க்கும் ஒரு இடத்தில் ஊழியர்கள் சரியான உடை அணிந்தால் தான் வேலை ஒழுங்காக நடக்கும், இல்லையேல் ஆடை குறித்த விமர்சனங்களுக்கே நேரம் சரியாகிவிடும் என்றும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்.