கடந்த வியாழன் அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா AI171 விமான விபத்து, 260க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்டது. இந்த கோரமான சம்பவம், கணக்கில்லாத சோகக் கதைகளையும், நெஞ்சை உலுக்கும் சம்பவங்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. உயிரிழந்தவர்களில், மோனாலி படேல் மற்றும் அவரது கணவர் சன்னி படேல் ஆகிய துரதிர்ஷ்டவசமான தம்பதியும் அடங்குவர். இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் ஏறிய இருவரும் தங்கள் உயிரை இழந்தனர்.
குஜராத்தின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அதிகம் வாழும் ஆனந்த் பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதி, உண்மையில் ஜூன் 12 அன்று பயணிக்க திட்டமிடவில்லை. முன்னதாக, அவர்கள் ஜூன் 6 அன்று விமான டிக்கெட்டுகளை பதிவு செய்திருந்தனர். ஆனால், சில சொந்த காரணங்களால், தங்கள் பயணத்தை தள்ளிப்போட்டு, துரதிர்ஷ்டவசமாக ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட அதே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆனந்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கானா கிராமத்தை சேர்ந்த இந் தம்பதியின் நெருங்கிய உறவினர் ஜிக்னேஷ் படேல், ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “மோனாலி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சன்னி தனது மனைவியை பார்த்துக்கொள்ள லண்டனில் தனது வேலையிலிருந்து விடுப்பில் வந்திருந்தார்.
“அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் தான் இருந்தார்கள். அதன்பின் ஜூன் 6ஆம் தேதி இருவரும் லண்டன் கிளம்ப முடிவு செய்தனர். ஆனால் சில காரணங்களால் தங்கள் பயணத்தை தள்ளி வைத்தனர். அதன்பின்னர் ஜூன் 12ஆம் தேதி மீண்டும் அவர்கள் லண்டன் கிளம்ப முடிவு செய்தனர். விமானத்தில் செக்-இன் செய்த பின்னர் நான் அவர்களுக்கு ‘குட் பை’ சொன்னேன். விமானத்தில் ஏறும் கடைசி தருணம் வரை அவர்களை நான் பார்த்து கொண்டே இருந்தேன்.
மோனாலி பகல் 1:20 மணிக்கு என் மனைவிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். எல்லாம் சரியாக இருக்கிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று என் மனைவியிடம் சொல்லி, எங்களுக்கு ஆசிர்வதித்தாள். பிறகு அவள் ‘குட் பை’ சொன்னார். அதுதான் அவரிடம் இருந்து வந்த கடைசி மெசேஜ்’ என்று கண்ணீருடன் கூறினார்.
மோனாலியின் பெற்றோர் முகேஷ் படேல் மற்றும் ஜெயஸ்ரீ படேல், விமான விபத்து பற்றி அறிந்தவுடன் லண்டனிலிருந்து உடனடியாக அகமதாபாத் வந்தனர். முகேஷ் மற்றும் ஜெயஸ்ரீ இருவரிடமும் தங்கள் மகள் மற்றும் மருமகன் இறந்த செய்தி தெரிவிக்கப்படவில்லை என்றும், இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டதாகவும் ஜிக்னேஷ் தெரிவித்தார். அதன்பின் செய்திகளை பார்த்து அவர்களே உண்மையை தெரிந்து கொண்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வரும் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில், தனது மகளின் உடலை உறுதிப்படுத்தும் நம்பிக்கையில் முகேஷ் படேல் DNA மாதிரியை வழங்கியுள்ளார். முடிவுகள் வர 72 மணி நேரம் ஆகலாம் என்று குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனாலி மற்றும் சன்னிக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் திருமணம் நடந்தது. விசா பிரச்சினைகள் காரணமாக அந்த திருமணத்தில் தான் கலந்து கொள்ள முடியவில்லை என்று ஜிக்னேஷ் கூறினார். “திருமணப் பொருட்கள் வாங்க செல்வதற்கு முன் அவள் என்னிடம் வந்தாள். நான் வந்திருக்க வேண்டும் என்று அவள் விரும்பியதாக சொன்னாள்,” என்று நினைவுகூர்ந்தார்.
அதன்பிறகு, சன்னி பலமுறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார். சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கின் போது ஆறு மாதங்கள் அவர் இங்கேயே தங்கியிருந்தார். “அவர் இந்தியாவை மிகவும் நேசித்தார். மீண்டும் மீண்டும் வர விரும்புவதாக எப்போதும் சொல்வார்,” என்று ஜிக்னேஷ் கூறினார்.