நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி இன்னும் இரண்டு வருடங்கள் கூட முழுதாக முடியவில்லை. ஆனால், தற்போதைய தமிழக அரசியல் விஜய்யை சுற்றியே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
திமுக, தங்கள் உண்மையான எதிரி அ.தி.மு.க. இல்லை, விஜய் தான் என்பதை காலதாமதமாக புரிந்துகொண்டதால், விஜய்க்கு எதிரான விமர்சனங்களை அதிகரித்து வருகிறது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் எப்படியாவது விஜய்யை தங்கள் கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விஜய் சேருவாரா என்ற கேள்விக்குறி நிலவும் நிலையில், பா.ஜ.க.வை கூட வெளியேற்றி விஜய்யுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி, அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்றும், அதற்கு ரஜினி ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாகவும் இன்னொரு செய்தி பரவி வருகிறது. அதேபோல், விஜய் தலைமையிலான ஒரு புதிய கூட்டணி உருவாகும் என்றும், அதில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்முறையாக இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக விஜய் அமைக்கும் கூட்டணி இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
மொத்தத்தில், 2026 தேர்தல் என்பது விஜய்யை மையப்படுத்தி மட்டுமே இருக்கும் என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதும், ரூ.200 கோடி சம்பளம் வாங்குபவர் என்பதும், அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், அரசியலை பொறுத்தவரை அவர் ஒரு புதுமுகம். அரசியல் தந்திரங்கள் தெரியாது; இன்னும் அவர் ஒரு போராட்டத்தை கூட களத்தில் இறங்கி நடத்தவில்லை; மக்களை சந்திக்கவில்லை; வீட்டில் உட்கார்ந்து அரசியல் செய்து வருகிறார் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.
ஆனால், அதே நேரத்தில், சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் கட்சி ஆரம்பித்தபோது இல்லாத எழுச்சி விஜய் கட்சி ஆரம்பித்தபோது உள்ளது என்றும், விஜய்யால் கண்டிப்பாக இந்த தேர்தலில் ஏதாவது ஒரு திராவிட கூட்டணியை வீழ்த்த முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் மதுரை வந்த அமித்ஷா, தனது கட்சிப் பிரமுகர்களிடம், “எப்படியாவது விஜய்யை நமது கூட்டணிக்கு கொண்டு வந்து விடுங்கள். அவர் இருந்தால்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்,” என்று உத்தரவிட்டதாகவும், இதனால் தமிழக பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்து இருப்பதாகவும், விஜய்யை எப்படி சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர போகிறோம் என்ற ஆலோசனைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், 2026 தேர்தலை பொறுத்தவரை, விஜய் தான் மக்களின் ஹீரோ என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
2026 Tamil Nadu Elections: Politics Revolving Around Vijay! – DMK, AIADMK, BJP Strategies?