கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர் தேர்வு.. சித்தராமையா , டிகே சிவகுமார் இடையே சமரசம்?

Published:

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது என்பதை பார்த்தோம்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்காமல் காய் நகர்த்திய நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டார். இருவரையும் சமாதானபடுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது என்பதும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சித்தராமையா மற்றும் டி கே சிவகுமார் ஆகியோரிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரமாக முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி கே சிவகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேல் இடத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது

tks and siddha

இது குறித்த அறிவிப்பை இன்று சோனியா காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி கிடைக்காத டி கே சிவகுமார் அதிருப்தியில் இருப்பதாகவும் எந்த நேரமும் கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆபத்து இருக்கும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

ஒரு வாரமாக ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த குழப்பம் தீர்ந்துவிட்டது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சித்தராமையாவுக்கு பல முக்கிய பொறுப்புகள் உள்ளன என்பதும், குறிப்பாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2000 ஆகியவற்றை அமல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பாரதிய ஜனதா கட்சி இதுவரை ஆளும் கட்சியாக இருந்த நிலையில் இனி எதிர்க்கட்சியாக அரசின் குறைகளை தட்டிக் கேட்கும் இடத்தில் உள்ளது. இனிவரும் காலங்களில் கர்நாடக மாநிலத்தின் அரசியல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...