ரஜினி, கமல், அஜித், விஜய் இல்லாமல் ரூ.1500 கோடி முதலீடு.. தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை மாற்றும் ஐசரி கணேஷ்

  தமிழ் சினிமாவில் லைகா போன்ற பெரிய நிறுவனங்களே தொடர் தோல்விகள் காரணமாக திரைப்பட தயாரிப்பிலிருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் ஐசரி கணேஷ், புது…

isari ganesh

 

தமிழ் சினிமாவில் லைகா போன்ற பெரிய நிறுவனங்களே தொடர் தோல்விகள் காரணமாக திரைப்பட தயாரிப்பிலிருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் ஐசரி கணேஷ், புது வேகத்துடன் அடுத்தடுத்து பல கோடிகளை தமிழ் சினிமாவில் முதலீடு செய்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எல். விஜய் இயக்கத்தில், பிரபுதேவா, தமன்னா நடித்த ‘தேவி’ திரைப்படம் மூலம் தான் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின் ‘போகன்’, ‘ஜுங்கா’, ‘எல்கேஜி’, ‘தேவி 2’, ‘கோமாளி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உட்படப் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவர் ஒரே நேரத்தில் 10 திரைப்படங்களை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதும், இந்த பத்து படங்களும் முன்னணி இயக்குநர்களால் இயக்கப்படும் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2025 முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் இந்த 10 படங்களின் தயாரிப்புகள் இருக்கும் என்றும், குறைந்தது ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு 100 முதல் 150 கோடி என்று வைத்துக் கொண்டாலும், சுமார் 1500 கோடி ரூபாயை அவர் தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாவதால், இந்த ஒரு படமே சுமார் 150 முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்படும் என தெரிகிறது. மேலும், கௌதம் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் அந்தோணி, அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்லா அய்யாவு, கணேஷ் பாபு ஆகியோர்களின் இயக்கத்தில் மற்ற படங்கள் உருவாக உள்ளன. இதில், விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய மூவரின் படங்களுக்கும் ஹீரோ தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மேற்கண்ட பத்து படங்களின் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற உள்ளதாகவும், சுமார் 1000 முதல் 1500 கோடி வரை அவர் தமிழ் சினிமாவில் முதலீடு செய்திருப்பதால், தமிழ் சினிமாவின் எதிர்காலமாகவே ஐசரி கணேஷ் பார்க்கப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, இளம் இயக்குநர்களுக்கு அவர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது இந்த இயக்குநர்களின் பட்டியலை பார்த்தாலே தெரியும். மாரி செல்வராஜ், பிரேம்குமார், அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்லா அய்யாவு, கணேஷ் பாபு ஆகியோர் திரையுலகில் ஒன்று அல்லது ஒரு சில படங்களை மட்டுமே இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் இயக்குநர்கள் மற்றும் அவர்களின் அழுத்தமான கதையை நம்பி மட்டுமே வேல்ஸ் ஃபிலிம்ஸ் இந்த படங்களை தயாரிக்கிறது என்பதும், தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் துணை இல்லாமல் சுமார் 1500 கோடி ரூபாயை ஐசரி கணேஷ் முதலீடு செய்திருப்பது என்பது அவருக்கு கதையின் மேல் உள்ள நம்பிக்கையை காட்டுவதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உட்பட பல நல்ல அழுத்தமான கதை அம்சம் கொண்ட படங்கள் வெற்றி பெற்று வருகின்றன என்பதும், ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’, ‘விடாமுயற்சி’ ’தக்லைஃப்’ உட்பட பல பெரிய பட்ஜெட் படங்கள் படுதோல்வி அடைந்து வரும் நிலையில், சிறிய பட்ஜெட் படங்களுக்கு இது போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் கொடுத்தால், தமிழ் சினிமா பல தரமான சினிமாக்களை தரும் என்பதும், ஆரோக்கியமான பாதைக்கு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.