இனிமேல் தினமும் 14 மணி நேரம் வேலை.. ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனங்கள்..!

Published:

 

ஐடி நிறுவனங்களில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் இனி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்று ஐடி ஊழியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் குறித்த சட்டத்தை திருத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வரும் நிலையில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 12 மணியிலிருந்து 14 மணி நேரமாக திருத்தம் செய்ய வேண்டும் என ஐடி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐடி நிறுவனங்களை பொருத்தவரை அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் தற்போது இரண்டு மணி நேரத்தை அதிகரிக்க பரிந்துரை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை செய்ய கூட்டத்தை நடத்தி உள்ளதாகவும் விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்களின் பரிந்துரைக்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 14 மணி நேரம் வேலை என்று மாற்றப்பட்டால் தற்போது மூன்று ஷிப்ட் என்று இருப்பது, இரண்டு ஷிப்டாக மாறிவிடும் என்றும் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஐடி துறையில் உள்ள ஊழியர்கள் மனச் சோர்வு உள்ளிட்ட மனநல பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கும் நிலையில் 14 மணி நேரம் வேலை என்பது மனிதர்களை இயந்திரங்களாக பார்க்கும் நோக்கம் என்றும் நான் தொழிலாளர்களை மனிதர்களாக கருத கர்நாடக அரசு தயாராக இல்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதே பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்போது கர்நாடக அரசு 14 மணி நேர வேலையை அமல்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...