பாகிஸ்தான் ஒரு மேட்டரே இல்லை.. சீனா தான் அடுத்த குறி.. எம்பிக்கள் குழுவை அனுப்பியது இதுக்குதானா?

  ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்க, அனைத்து கட்சி பாராளுமன்ற எம்பிக்கள் கொண்ட குழுக்களை முக்கிய…

all party

 

ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையை உலக நாடுகளுக்கு விளக்க, அனைத்து கட்சி பாராளுமன்ற எம்பிக்கள் கொண்ட குழுக்களை முக்கிய வெளிநாட்டு நகரங்களுக்கு அனுப்பி, பலதரப்பட்ட தூதரக முயற்சி ஒன்றை இந்தியா தொடங்கியுள்ளது.

இந்த குழுக்களில் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சசி தரூர் உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. அவர் நாட்டின் நெருக்கடியான நேரங்களில் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒருமைப்பாட்டை உருவாக்கக்கூடிய ஒரு அரசியல்வாதியாக திகழ்கிறார்.

இந்த முயற்சியின் நேரடி விளைவுகள் என்னவென்பதற்கான ஒரு துல்லியமான அளவுகோல் இல்லை. இருப்பினும், இது பாகிஸ்தானுடன் இடைவெளி அதிகரிக்கும்போது இந்தியாவின் பன்னாட்டு தனிமைப்படுத்தலுக்கு எதிரான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின், உலக நாடுகள் இந்தியாவுக்கு முழுமையாக ஆதரவு கொடுக்கவில்லை. சீனா மற்றும் துருக்கி மட்டும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்தன. மேலும், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தும் IMF, பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் உதவித் தொகையை நிறைவேற்றியது. இது இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு குரலை பலவீனமாக்கியது.

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்ற ஆவணங்களை வழக்கமாக வழங்கும் பழக்கம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால், இந்த முறை பாகிஸ்தான் IMF கொடுக்கும் நிதிஉதவி தொகைகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதை உலக நாடுகளுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் ஒரே அளவிலான இருதரப்பு பிரச்சனையாக உலக நாடுகள் பார்க்க வேண்டாம் என்பதுதான் இந்தியாவின் முக்கிய கவலை. டொனால்ட் டிரம்ப் கூறியது போல “நான் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் செய்தேன்” என்பது போன்ற தவறான விளக்கங்கள், ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சனையை, சாதாரண சண்டையாக காட்டுகின்றன. இது, இந்தியா–அமெரிக்கா உறவை பாதிக்கக்கூடிய அளவில் உள்ளது.

மேலும் இந்த விஷயத்தில் சீனாவின் பங்கு என்பது இன்னும் பெரிய சவாலாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தானை மட்டுமின்றி சீனாவையும் சேர்ந்து கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளது. நாளை பாகிஸ்தானும், சீனாவும் சேர்ந்து இந்தியாவை தாக்கினால் அப்போது உலக நாடுகள் ஆதரவு இந்தியாவுக்கு தேவைப்படும். எனவே பாகிஸ்தானை மட்டும் டார்கெட் செய்யாமல் சீனாவையும் சேர்த்து டார்கெட் செய்வதே இந்தியாவின் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.