இன்றைய வணிகத் தொடக்கத்தில், பாகிஸ்தானின் பிரதான குறியீடு KSE-100, ஒரு நாள் வர்த்தகத்தின் போது 9,928 புள்ளிகள் உயர்ந்து 1,17,104.11 என்ற உச்சத்தை எட்டியது.
இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையில், மே 9 அன்று IMF, பாகிஸ்தானுக்கு $2.3 பில்லியன் நிவாரணத் தொகையை ஒதுக்கியது. இந்த முடிவில் இந்தியா வாக்களிக்காமல் விலகியது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்திய பங்குச்சந்தைகள் நிப்டி 50 மற்றும் பிஎஸ்இ சென்செக்ஸ், இன்று காலை 10:15 மணி 24,700.05 மற்றும் 81,689.46 என்ற அளவுக்கு 2.5%க்கும் அதிகமாக உயர்ந்தன. கடந்த புதன்கிழமை இந்தியா பாகிஸ்தானை தாக்கியபோது சந்தை இழந்த 1.5% இழப்பை மீட்டுவிட்டன. சிறு மற்றும் நடுத்தர நிறுவன பங்குகள் முறையே 3.5% மற்றும் 3.1% உயர்ந்துள்ளன. அதாவது சென்செக்ஸ் இன்று மட்டும் 2600 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இரு நாட்டு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய லாபமாக பார்க்கப்படுகிறது.
மே 8 அன்று, பாகிஸ்தானின் KSE-30 குறியீடு 7.2% வீழ்ந்ததை அடுத்து பாகிஸ்தானின் பங்குச் சந்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பாகிஸ்தான் பங்குச் சந்தை 22 ஆண்டுகளில் அதிகப்படியான வருமானத்தை கொடுத்து, உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது. கடந்த ஒரு வருடத்தில் KSE-30 குறியீடு 33% மேல் உயர்வடைந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு தற்போது $20.36 பில்லியனாக உள்ளது. இந்தியாவில் 5,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் வெறும் 500-க்கும் கீழ்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன. சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்திய பங்குச்சந்தை உலகளவில் டாப் 5 இடங்களில் ஒன்றாக $5 டிரில்லியன் மதிப்பீட்டுடன் உள்ளது.