இன்று மதியம் மூன்று மணி முதல் ChatGPT முடங்கியது என்ற தகவல் உலகம் முழுவதும் இன்டர்நெட் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் செய்துள்ள புலம்பலைப் பார்க்கும்போது, ChatGPT என்ற ஒன்று இல்லாவிட்டால் இனி உலகமே இயங்காது போல என மீம்ஸ்கள் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தளங்களில் ஒன்றான ChatGPT உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை வைத்துள்ளது. முன்பெல்லாம் கூகுளில் தான் ஏதாவது ஒரு விஷயத்தைத் தேட வேண்டும் என்றால் செல்வார்கள். ஆனால், தற்போது கூகுளை மறந்துவிட்டு மக்கள் ChatGPTக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். அதில் சந்தேகங்களை மட்டும் இன்றி, டெக்னிக்கல் விஷயங்களையும், மொழிபெயர்ப்பையும், உரையாடல்களையும், சினிமா சம்பந்தப்பட்ட தகவல்களையும் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், ChatGPT என்பது ஒரு டெக்னிக்கல் நபருக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இனிமேல் ChatGPT இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடக்காது என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் மூன்று மணி முதல் திடீரென சாட்ஜிபிடி முடங்கியதை அடுத்து, உலகில் உள்ள அனைத்து டெக்னிக்கல் நபர்களும் ஸ்தம்பித்துப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவர் தனது சமூக வலைதளத்தில், ChatGPT முடங்கி விட்டதா? இனி நான் எப்படி வேலை செய்வேன்? எனக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லையே!” என்று பதிவு செய்துள்ளார்.
“இன்று எனது வேலை பூஜ்ஜியத்துக்கும் குறைவாக உள்ளது. அதற்கு காரணம் ChatGPT டவுன் தான்!” என்று இன்னொருவர் பதிவு செய்துள்ளார். ChatGPT முடங்கிவிட்டதா? என் பெயர் கூட எனக்கு ஞாபகம் இல்லையே!” என இன்னொரு நபர் வேடிக்கையாகப் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில், ChatGPT இல்லாமல் உலகமே இயங்காது என்பது போன்ற மீம்ஸ்கள் பதிவாகி வருவது ஒரு பக்கம் காமெடியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இது கிட்டத்தட்ட உண்மைதான் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ChatGPTயில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை OpenAI ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும், விரைவில் டெக்னிக்கல் குறைகளைத் தீர்த்து இயல்பு நிலைக்கு ChatGPTயை திரும்பக் கொண்டு வருவோம் என்றும் ஓபன்ஏஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.