ஐசிஐசிஐ வங்கி UPI-யில் PayLater என்ற சேவையை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் இந்த சேவையை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால் பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஐசிஐசிஐ வங்கி தனது Pay Later சேவையை UPI தளங்களில் நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு iMobile செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான இந்த சேவை, வாடிக்கையாளர்கள் கடனாக பொருட்கள் வாங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு பின் UPI வழியாக பணம் செலுத்தும் வசதியை வழங்கியது. இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தனது உள் கொள்கையின் அடிப்படையில் இந்த சேவையை நிறுத்தியதாகவும், வேறு எந்த காரணமும் இல்லை என்றும் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் PayLater கணக்கில் ஏதேனும் நிலுவை தொகை இருந்தால் திருப்பி செலுத்துவது கட்டாயம் என்றும், மாத சந்தா அறிக்கைகள் வழக்கம் போல் தொடரும் என்றும், iMobile Pay அல்லது இணைய வங்கி மூலமாக கட்டணங்களை செலுத்தலாம் என்றும் வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
மேலும் PayLater சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள Auto Pay அமைப்புகளை உடனடியாக வேறு கட்டண முறைக்கு மாற்ற வேண்டும் என்றும், சேவை நிறைவு செய்யப்பட்ட பிறகு Auto Pay செயல்படாது என்றும், மின்சாரம், OTT சந்தா போன்ற முக்கிய கட்டணங்களுக்கு இந்த சேவையை இதுவரை பயன்படுத்தியவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.