ஹைதராபாத்தில் உள்ள சம்ஷாபாத் விமான நிலையத்தில் ஒரு பெரும் விபத்து கடைசி நேரத்தில் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் விமான பயணமே வேண்டாம், பேசாமல் ரயிலில் சென்று விடலாம் என பல பயணிகளை யோசிக்க வைத்துள்ளது!
ஹைதராபாத்தில் ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதுதான் இதற்கு காரணம். விமானி தனது சமயோஜித புத்தியால், விமானம் கிளம்புவதற்கு முன்பே அதை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டார். இதனால், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, பல நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, விமானிக்கு ஒரு தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை உணர்ந்தார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட விமானி பிரேக் போட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே பாதுகாப்பாக நிறுத்தினார். விமானம் புறப்படவிருந்த சில நிமிடங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
AI-2534 என்ற அந்த விமானம், நேற்று மதியம் 2 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியபடி, 97 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த அந்த ஏர் இந்தியா விமானத்தில் இந்த தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. விமானி உடனடியாக பிரேக் போட்டு விமானத்தை நிறுத்தினார். உடனடியாக செயல்பட்ட ஏர் இந்தியா குழுவினர், பயணிகளை அவர்களது இலக்குக்கு அனுப்பி வைக்க மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, பயணிகள் AI-2445 என்ற மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானம் மதியம் 2.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும், மதியம் 3.05 மணிக்குத்தான் புறப்பட்டது. இதில், முதலில் கோளாறு கண்டறியப்பட்ட விமானத்தில் இருந்த 97 பயணிகள் உட்பட மொத்தம் 148 பேர் மும்பை சென்றடைந்தனர்.
இந்தச் சம்பவம், கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த சோகமான ஏர் இந்தியா விமான விபத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர்; பிரிட்டனை சேர்ந்த விஸ்வஷ்குமார் ரமேஷ் மட்டுமே உயிர் தப்பினார்.
தற்போது, சம்ஷாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணம் என்ன என்பதை கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதையும் கண்டறியும் வகையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.