சாதாரணமாக உடை அணிந்து லம்போர்கினி ஷோரூமுக்குள் நுழைந்த ஒரு தந்தை-மகன் ஜோடி, அங்கிருந்து அந்த நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கி சென்ற சம்பவம், தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த இந்த குடும்பம், அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த லம்போர்கினி ஸ்டெராடோ ரக காரை வாங்கியுள்ளது. இதன் ஆரம்ப விலையே ரூ. 4.61 கோடி ஆகும். இவர்களின் எளிமையான அணுகுமுறை மற்றும் ஆடம்பரம் இல்லாத செயல்பாடு, சமூகத்தில் நிலவும் சில பொதுவான எண்ணங்களை உடைத்து, இணைய பயனர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
இணையத்தில் வெளியான படங்களின்படி, பெங்களூருவை சேர்ந்த இந்த குடும்பத்தினர், கோடிக்கணக்கில் விலையுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் காரை, பகட்டான இடங்களிலோ அல்லது டிசைனர் உடைகளை அணிந்தோ தங்கள் செல்வத்தை வெளிப்படுத்தாமல், ஒரு தனிப்பட்ட இடத்தில் டெலிவரி பெற்றுள்ளனர். முடிந்தவரை ரகசியமாக வைத்து கொள்ளும் நோக்கில், இதற்கென ஒரு தனிமையான இடத்தையே அவர்கள் தேர்ந்தெடுத்ததும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் எளிமையான உடைகளிலேயே காட்சியளித்தனர்.
லம்போர்கினி ஸ்டெராடோ என்பது புகழ்பெற்ற ஹுராகன் மாடலின் ஒரு சிறப்பு பதிப்பாகும். இது 2022 இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த மாடலில் மொத்தம் 1,499 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய சந்தைக்கு வெறும் 15 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன என்பது இதன் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதள பையனர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒருவர் ’நட்புக்காக’ திரைப்படத்தில் கார் வாங்க சரத்குமாரும் விஜயகுமாரும் கிராமத்தான் போல் சென்று சாக்கு மூட்டைகளில் உள்ள பணத்தை எடுத்து ஷோரூம் ஓனரிடம் கொடுக்கும் காட்சியை நினைவு படுத்தினார். மிகவும் எளிமையாக வந்து ஆடம்பர காரை வாங்கி சென்ற இவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது