கீழடிக்கு நிகரான ஒரு ஆய்வு.. 4500 ஆண்டுகளுக்கு முந்தைய சரஸ்வதி நதி கண்டுபிடிப்பு.. ராஜஸ்தான் மாநில ஆய்வில் அதிசயம்.. ஆச்சரியம்..!

  ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள பஹாஜ் கிராமத்தில், 4,500 ஆண்டுகள் பழமையான ஒரு நாகரிகத்தின் ஆதாரங்களை இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில்,…

saraswathi

 

ராஜஸ்தான் மாநிலம் டீக் மாவட்டத்தில் உள்ள பஹாஜ் கிராமத்தில், 4,500 ஆண்டுகள் பழமையான ஒரு நாகரிகத்தின் ஆதாரங்களை இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இந்த அகழ்வாராய்ச்சியில், பல குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளன. அதில் 23 மீட்டர் ஆழமான புராதன நதிப்பாதை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இதை ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராண சரஸ்வதி நதியுடன் தொடர்புபடுத்துகின்றனர். இந்த பண்டைய நதி அமைப்பு ஆரம்பகால மனித குடியேற்றங்களை ஆதரித்திருக்கலாம் என்றும், பஹாஜ் கிராமத்தை சரஸ்வதி நதிப் படுகை கலாச்சாரத்துடன் இணைத்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்த அகழ்வாராய்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மண் பாண்டங்கள், பிராமி எழுத்துக்களின் பழமையான முத்திரைகள், தாமிர நாணயங்கள், யாக குண்டங்கள், மௌரியர் கால சிற்பங்கள், சிவன் மற்றும் பார்வதி சிலைகள், மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவை அடங்கும்.

இந்த அகழ்வாராய்ச்சி, ஹரப்பாவுக்கு பிந்தைய காலம், மகாபாரத காலம், மௌரியர் காலம், குஷானர் காலம் மற்றும் குப்தர் காலம் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு காலகட்டங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பிரஜ் பகுதி மத, கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தின் மையமாக இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

பஹாஜ் கிராமத்தில் சுமார் 23 மீட்டர் ஆழம் வரை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது ராஜஸ்தானில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக ஆழமான அகழ்வாராய்ச்சி என்று கூறப்படுகிறது.

இந்திய தொல்லியல் துறையின் தள தலைவர் பவன் சரஸ்வத் இதுகுறித்து அளித்த பேட்டியில், அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பண்டைய நதிப்பாதை, ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதியுடன் தொடர்புடையது என்றார். இந்த நீர் அமைப்பு ஆரம்பகால மனித குடியேற்றங்களை ஆதரித்து, சரஸ்வதி பள்ளத்தாக்கை மதுரா மற்றும் பிரஜ் பகுதிகளுடன் இணைத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தொல்லியல் துறை குழுவின் கூற்றுப்படி, அகழ்வாராய்ச்சியில் மகாபாரத கால அடுக்குகள், மட்பாண்டங்கள் மற்றும் யாக குண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் செவ்வக மற்றும் வட்ட வடிவ ஓவியங்கள் மற்றும் அக்னி சடங்குகளின் எச்சங்கள் காணப்படுகின்றன. இந்த மண் பாண்டங்கள் மகாபாரத கால ஆடைகள் மற்றும் பாத்திரங்களின் விளக்கங்களுடன் பொருந்துகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதே தளத்தில் இருந்து கி.மு. 400 ஆம் ஆண்டைச்சேர்ந்த ஒரு சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது மௌரியர் கால தாய் தெய்வத்தின் தலைப்பகுதி என்று நம்பப்படுகிறது. குப்தர் கால கட்டிடக்கலை பாணியிலான களிமண் சுவர்கள் மற்றும் தூண்கள், உலோகவியலுடன் தொடர்புடைய உலைகள் , ஊசிகள், சீப்புகள் மற்றும் வார்ப்புகள் உள்ளிட்ட எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வடிவில் கண்டறியப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மற்ற ஆதாரங்களில் சிவன்-பார்வதி டெரகோட்டா சிலைகள் அடங்கும். இவை சக்தி மற்றும் பக்தி மரபுகளுடன் தொடர்புடையவை. சங்கு வளையல்கள் மற்றும் விலைமதிப்பற்ற கல் மணிகள் அந்த காலத்தின் வர்த்தகம் மற்றும் அழகுப் பாரம்பரியங்களை பிரதிபலிக்கின்றன. வேத மற்றும் உத்தரவேத காலங்களின் மத சடங்குகளை உறுதிப்படுத்தும் 15-க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, அகழ்வாராய்ச்சியின் போது ஒரு மனித எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அகழ்வாராய்ச்சி, ராஜஸ்தான் மட்டுமல்லாமல், முழு வட இந்தியப் பகுதியின் பண்டைய வரலாற்றை புரிந்துகொள்வதற்கும் ஒரு புதிய திசையை வழங்குகிறது. இந்திய தொல்லியல் துறை, கலாச்சார அமைச்சகத்திடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. மேலும், இந்த பகுதி ஒரு தேசிய தொல்லியல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.