அமைதிக்கு பெயர் தான் சாந்தி.. நேர்காணலில் அமைதியாக இருந்ததால் வேலை கிடைக்கவில்லை.. ஒரு இளைஞரின் சோக பதிவு..!

  ஒரு இளைஞர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், பல சுற்றுகளில் அவர் திருப்திகரமாக பதிலளித்ததால், வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கடைசியாக அவர் HR அதிகாரியை சந்தித்தபோதுதான் அவருக்கு…

HR

 

ஒரு இளைஞர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், பல சுற்றுகளில் அவர் திருப்திகரமாக பதிலளித்ததால், வேலை கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கடைசியாக அவர் HR அதிகாரியை சந்தித்தபோதுதான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

HR நேர்காணலின்போது அவர் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்ததாகவும், அதனால் அவர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வேலைக்கு தகுதி இல்லாதவர் என்று நிராகரிக்கப்பட்டதாகவும் அந்த இளைஞர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், நேர்காணலின்போது பல சுற்றுகளில் தான் திருப்தியாக பதில் அளித்ததால், அனைவருமே “உங்களுக்கு வேலை கண்டிப்பாகக் கிடைக்கும்” என்று நம்பிக்கை அளித்ததாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய இந்த பணி தனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதும், தொழில்நுட்ப நேர்காணல் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் தான் அவருக்கு HR சுற்றில் அதிர்ச்சி காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

HR நேர்காணல் முடிந்ததும், “மன்னிக்கவும், நீங்கள் மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள். அமைதியான நபர் எங்களுக்கு தேவையில்லை; அதனால் நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள்,” என்று நேர்காணல் அதிகாரி கூறியவுடன், “எனக்கு சிரிப்பதா அல்லது அதிர்ச்சி அடைவதா என்று தெரியவில்லை,” என்றும், “ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தால் நான் பணிக்கு பொருத்தமற்றவர் என்று அந்த HR அதிகாரி முடிவு செய்ததைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு டெக்னிக்கல் நேர்காணலின் போதும் தனது திறமையை நிரூபித்ததாகவும், “தான் இந்த வேலைக்கு பொருத்தமானவர்” என்று சில அதிகாரிகளே கூறியதாகவும் பதிவு செய்துள்ளார். “HR ரவுண்டில் தான் என்ன தவறு நடந்தது என்று எனக்கு தெரியவில்லை,” என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பதிவுக்கு பல கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன. “நீங்கள் ஒரு சிக்கலான நிறுவனத்தில் இருந்து தப்பித்து விட்டதாக நினைத்து கொள்ளுங்கள்,” என்று ஒருவர் பதிவு செய்துள்ளார். “அந்த நிறுவனம் பயமுறுத்தக்கூடிய அல்லது ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு விண்ணப்பதாரரைத் தேடியிருக்கலாம். நீங்கள் அவர்களுக்கு ஒரு அமைதியான உணர்வைக் கொடுத்தீர்கள், ஆனால் அதை அவர்கள் மற்ற ஊழியர்களுடன் விரும்பவில்லை,” என்று இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.

“HR அதிகாரிகள் பெரும்பாலும் தவறான முடிவைத்தான் எடுக்கிறார்கள் என்றும், ஒரு நபர் வேலையில் எந்த அளவுக்கு சிறந்தவர் என்பதை அவர்கள் பார்ப்பதே இல்லை,” என்றும் தன்னுடைய அனுபவத்தை இன்னொரு நபர் பகிர்ந்துள்ளார். “ஒருமுறை நான் நேர்காணலுக்குச் சென்றபோது, ‘நீங்கள் குடித்துவிட்டு பேசுபவர் போல் பேசுகிறீர்கள்’ என்று HR அதிகாரி கூறினார் என்றும், அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன்,” என்றும் இன்னொரு பயனாளி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“மொத்தத்தில் ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்றால் அமைதியாக இருக்கக் கூடாது என்பது இந்த பதிவில் இருந்து தெரிகிறது,” என்பதுதான் பெரும்பாலான கமெண்ட்களாக உள்ளன.