UPI பயனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுகின்றன. கடந்த மூன்று நான்கு மாதங்களில் பல முறை UPI சேவை முடங்கியுள்ளது. உதாரணமாக, ஏப்ரல் 12 அன்று ஐந்து மணி நேரம் UPI சேவைகள் கிடைக்காததால், பரிவர்த்தனைகளை முடிக்க முயன்ற பயனர்கள் பெரும் சிரமத்தையும் குழப்பத்தையும் சந்தித்தனர்.
மீண்டும் மீண்டும் வரும் API கோரிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் சிஸ்டத்தின் சுமை ஆகியவை UPI தோல்விகளுக்கு முக்கிய காரணங்களாகும். UPI அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, வாலட்கள் பணம் மற்றும் கார்டுகளின் பயன்பாடு கணிசமாக குறைந்துவிட்டது. தினசரி பண பரிமாற்றங்களுக்கு UPI பயன்பாடு அதிகரித்து வருகிறது. UPI சேவைகளில் ஒரு சிறிய தடை ஏற்பட்டாலும், லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போது, UPI ஒரு நொடிக்கு சுமார் 7,000 பரிவர்த்தனைகளை கையாள்கிறது. ஒரு நிமிடம் கூட சிஸ்டம் கிடைக்காமல் போனால், சுமார் 4 லட்சம் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள். UPI-ஐ தற்போது 40 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் செலுத்த பயன்படுத்துகிறார்கள்.
இந்தத் தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்ய, NPCI ஆகஸ்ட் 1 அன்று புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வரவுள்ளது. PhonePe, Paytm, Google Pay போன்ற அனைத்து வங்கிகள் மற்றும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர்களுக்கு மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் பத்து API-களை ஜூலை 31-க்குள் நிர்வகிக்க NPCI அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி இனி பயனர்கள் ஒரு UPI செயலியை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் வங்கி பேலன்ஸ் இருப்பை பார்க்க முடியும்.
தானாகவே பணம் செலுத்தும் (Autopay) முறை மாற்றி அமைக்கப்படும்.
பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்குகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
SIP அல்லது Netflix சந்தாக்கள் போன்ற ஆட்டோ பே பரிவர்த்தனைகள் இரவு 9:30 மணிக்கு பிறகு, காலை 10 மணிக்கு முன், மற்றும் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செய்யப்படும்.
இந்த மாற்றங்கள் UPI சேவையை மேலும் மேம்படுத்தி, தடையின்றி செயல்பட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.