பூனைக்கு மணி கட்டுவது யார்? அட்வான்ஸ் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் ஹவுஸ் ஓனர்கள்.. தலைவிரித்தாடும் அராஜகம்..!

  பெங்களூருவில் வீட்டு உரிமையாளர் ஒருவரால் தான் சந்தித்த மோசமான அனுபவத்தை பற்றி ஷ்ரவன் டிக்கூ என்பவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு, இப்போது வலைதளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சமீபத்தில்…

house owner

 

பெங்களூருவில் வீட்டு உரிமையாளர் ஒருவரால் தான் சந்தித்த மோசமான அனுபவத்தை பற்றி ஷ்ரவன் டிக்கூ என்பவர் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு, இப்போது வலைதளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் வீட்டை மாற்றிய ஷ்ரவன், தனது ₹1.5 லட்சம் அட்வான்ஸ் பணத்தில் பாதிக்கும் குறைவான பணத்தையே வீட்டு உரிமையாளர் திருப்பி தந்ததாகவும், தன்னிச்சையாப் பல காரணங்களுக்காக பணத்தை கழித்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தன் அனுபவத்தை பற்றிப் பேசிய ஷ்ரவன், தான் இரண்டு படுக்கையறை கொண்ட அந்த அடுக்குமாடி வீட்டில் இரண்டு வருடங்கள் வசித்ததாகவும், ஆனால் வீட்டு உரிமையாளருடன் ஒருமுறை கூட நேரடியாக பேசியதில்லை என்றும் குறிப்பிட்டார். வீட்டு உரிமையாளர் எப்போதுமே இன்னொரு நபர் வழியாகத்தான் பேசுவாராம். “அந்த உரிமையாளர் இதற்கு முன் வசித்தவர்களை தொந்தரவு செய்ததாக எப்போதும் ஒரு பேச்சு இருந்தது. அதனால், நான் காலி செய்யும் நேரம் வந்தபோது, மனதளவில் தயாராகவே இருந்தேன்,” என்றார் அவர். ஆனாலும், அதன் பிறகு நடந்தவை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின: பெயிண்டிங்கிற்காக ₹55,000, “மற்ற சேதங்களுக்காக” ₹25,000, மற்றும் லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக ₹2,000 என பிடித்தம் செய்யப்பட்டிருந்தது.

சரியான பில்களை கேட்டபோது, ஷ்ரவனுக்கு வெறும் கையால் எழுதப்பட்ட ஒரு தாள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில், தெளிவாக இல்லாத கட்டணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இறுதியில், அவர் தனது வைப்புத்தொகையில் வெறும் ₹68,000 மட்டுமே திரும்பப் பெற்றார். இது டெபாசிட்டில் 40% க்கும் சற்று அதிகம்.

“சரியான முறையில் சரிபார்க்காதது என்னுடைய தவறுதான்,” என்று ஒப்புக்கொண்ட ஷ்ரவன், “ஆனால் உண்மையில், பெங்களூருவில் வீட்டு உரிமையாளர்களை கையாள்வது மிகவும் மன உளைச்சலை தருகிறது” என்று கூறினார்.

“பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் ஒரு பெரிய தொல்லையாக மாறி வருகிறார்கள்,” என்று முடித்த ஷ்ரவன் டிக்கூ, “யாரேனும் இதை மாற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார். இந்த பதிவுக்கு பலர் தாங்களும் இதே போன்ற மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஒருவர், “இது பெங்களூரு மட்டுமல்ல. சென்னையிலும் என் வீட்டு உரிமையாளர் என்னை இதேபோல் ஏமாற்றினார். இந்தியாவில் நியாயமான வாடகை ஒழுங்குமுறை இல்லை” என்று எழுதியிருந்தார்.

மற்றொருவர், “என் வீட்டு உரிமையாளர் என் ₹4 லட்சம் டெபாசிட்டில் ₹1 லட்சம் பிடித்தம் செய்துவிட்டார். என் சொந்த பணத்தைக் கேட்பது கூட ஒரு பதட்டமாக இருந்தது,” என்று பதிவிட்டுள்ளார்.

ஹவுஸ் ஓனர்களின் இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு தான் விதிகளை வகுக்க வேண்டும் என்றும், அல்லது யாராவது ஒருவர் துணிந்து நீதிமன்றம் சென்றால் தான் தீர்வு கிடைக்கும் என்றும், பூனைக்கு யாராவது ஒருவர் மணி கட்ட வேண்டும் என்றும் ஒருவர் பதிவு செய்துள்ளார்,.