சமீபத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் சமூக வலைதளத்தில் ஒரு வரைபடத்தை பகிர்ந்தது. அதில், இந்தியாவின் எல்லைகள் தவறாக காட்டப்பட்டு, ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு X தளத்தில் வெளியான இந்தப் பதிவு, ஈரானை “உலகளாவிய அச்சுறுத்தல்” என்று இஸ்ரேல் கருதுவதை பற்றி பேசும் ஒரு பெரிய செய்தியின் பகுதியாக இருந்தது. ஆனால், இந்த தவறான வரைபடம் இந்தியப் பயனர்கள் மத்தியில் உடனடியாகக் கடும் விமர்சனங்களைத் தூண்டியது.
இந்தியர்களின் கண்டனங்கள் வலுத்த நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நேரடியாக பதிலளித்து மன்னிப்பு கோரியது. “இந்த பதிவு ஒரு பிராந்தியத்தை விளக்கும் ஒரு படம் மட்டுமே. இந்த வரைபடம் எல்லைகளை துல்லியமாக காட்டத் தவறிவிட்டது. இதனால் ஏற்பட்ட எந்த வருத்தத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று IDF தெரிவித்தது. அசல் ட்வீட் வெளியான சுமார் 90 நிமிடங்களுக்கு பிறகு இந்த பதிவு வந்தது. பல பயனர்களும் IDF-ஐ அந்த வரைபடத்தை நீக்கி, திருத்தி மீண்டும் பதிவிடுமாறு வலியுறுத்தினர்.
இந்த வரைபடத் தவறு, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வலுவான மற்றும் கவனமாக வளர்க்கப்பட்ட உறவு காரணமாக பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல், பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் ஆனார். இது விவசாயம், சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் இரு நாடுகளின் உறவுகளை உறுதிப்படுத்திய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணமாகும்.
இன்று, அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங் மற்றும் சீனாவுடன் சேர்த்து, இஸ்ரேலின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்றாகும். இஸ்ரேலிய ராணுவ உபகரணங்களை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இத்தகைய நெருங்கிய உறவின் பின்னணியில், இஸ்ரேலிய ராணுவத்தால் ஒரு தவறான வரைபடம் பயன்படுத்தப்பட்டது, அது தற்செயலாகவோ அல்லது கவனக்குறைவாகவோ இருந்தாலும், இந்திய மக்களிடையே ஒரு உணர்ச்சிப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இஸ்ரேல் உடனே தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதற்கு நெட்டிசன்கள் ‘அந்த பயம் இருக்கனும்டா’ என பதிவு செய்து வருகின்றனர்.