கடந்த வியாழக்கிழமை மதியம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 171, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து, பல கனவுகளையும் கதைகளையும் பாதியிலேயே முடித்துவிட்டது. விமானத்தில் பயணம் செய்த ஒரு பிரிட்டிஷ் குடிமகனை தவிர, அனைவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது.
விபத்தில் பலியான ஒருவரின் மகளான பல்குனியின் உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டாடா குழுமம் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் கருணைத்தொகை அறிவித்திருந்த நிலையில், “நீங்கள் என் அப்பாவைத் திருப்பிக் கொடுத்தால், நான் டாடா குழுமத்திற்கு 2 கோடி ரூபாய் தருகிறேன்,” என்று கலங்கிய கண்களுடன் பல்குனி பேசியது, காண்போரின் நெஞ்சை பிழிந்தது.
“இந்த நஷ்ட ஈடு என் அப்பாவை திருப்பிக் கொண்டு வந்துவிடுமா? என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவருக்கு என் அப்பா தேவை. எனக்கு அவரது அன்பும் பாசமும் வேண்டும். எப்போதும் ஏர் இந்தியாவில் பயணிக்க விரும்பிய என் அப்பாவை அவர்களால் திருப்பி கொடுக்க முடிந்தால், நான் அவர்களுக்கு 2 கோடி ரூபாய் தருகிறேன்,” என்று தனது டி.என்.ஏ மாதிரியை கொடுக்க காத்திருந்தபோது பல்குனி கதறினார்.
நேற்று மட்டும் மருத்துவமனை அதிகாரிகள், 219 பேரின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தனர். “பெரும்பாலான உறவினர்கள் மாதிரிகளை வழங்கியுள்ளனர். சில வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்தும் மாதிரிகள் கிடைத்துள்ளன. உயிரிழந்தவர்களின் டிஎன்ஏ பகுப்பாய்வும் நடந்து வருகிறது. மாதிரி பொருத்தம் கிடைத்தவுடன், அடையாளம் காணும் பணி தொடங்கும். அதன் பிறகு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்,” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்ய பல குழுக்கள் செயல்பட்டு வருவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இருப்பினும், இந்த செயல்முறை 48 முதல் 72 மணி நேரம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போயிங் ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில், ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.