அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா AI 171 விமான விபத்தில், லண்டனில் வசித்த 45 வயது ரூபல் படேல் என்பவர் உயிரிழந்த 241 பேர்களில் ஒருவர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது சகோதரி ரூபலை வழியனுப்பி வைத்ததை, அவரது சகோதரர் பவன் படேல் மிகுந்த வேதனையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
குஜராத், நாடியாட், உத்தரசந்தா கிராமத்தில் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனிலிருந்து இந்தியா வந்திருந்தார் ரூபல். வியாழக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ‘ட்ரீம்லைனர்’ ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்தார்.
பவன் படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் சகோதரி சிகிச்சைக்காக நாடியாட் வந்திருந்தார். இன்று அவருக்கு விமானம் என்பதால், லண்டன் திரும்ப இருந்தார். நான் அவரை விமான நிலையத்தில் இறக்கிவிட சென்றேன். ஆனால், நான் வீடு திரும்பியதும் விமானம் விபத்துக்குள்ளானது என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. என் சகோதரி 15 ஆண்டுகளாக லண்டனில் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.”
அவர் மருத்துவ பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். நான் அவரது பைகளை எடுத்து சென்று, கடைசியாக அவரை கட்டிப்பிடித்து உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்’ என்று கூறினேன்.” என்று உருக்கமாக கூறினார்.
இன்னும் ரூபெல் உடல் கிடைக்கவில்லை. படேல் குடும்பத்தினர் தற்போது டி.என்.ஏ. மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் முடிவுகள் 72 மணி நேரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.