நேற்று அகமதாபாத்தில் நிகழ்ந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்து, நாட்டையே உலுக்கியது. 250க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட இந்த சோகம், விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாகவே மருத்துவ கல்லூரி கட்டிடத்தில் மோதி நிகழ்ந்தது. இந்தச் சூழலில், சர்மிஸ்தா என்ற ஜோதிடர் ஒருவர், தான் முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவுகளுக்கும் இந்த விபத்துக்கும் தொடர்பு இருப்பதாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த நாளன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சர்மிஸ்தா, “அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் பல உயிர்களை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. குரு இன்னும் ஆர்த்ராவில் நுழையவில்லை, இந்தியாவின் செவ்வாய் மகாதிசை இன்னும் தொடங்கவில்லை, ஆயினும் இவ்வளவு பெரிய சம்பவம் ஏற்கனவே தொடங்கிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவை தனது பழைய கணிப்புகளுடன் தொடர்புபடுத்தியோடு, ஓம் சாந்தி” என்று சேர்த்தது பலருக்கும் எரிச்சலை மூட்டியது.
முன்னதாக, ஜூன் 5 அன்று அவர் “2025ல் விமான விபத்து மற்றும் விமானப் போக்குவரத்தில் அழிவு ஏற்படும்” என்று இதே ஜோதிடர் கணித்திருந்தார். மேலும், அக்டோபர் 2023 மற்றும் டிசம்பர் 2024 ஜெஜு விமான விபத்துகள் குறித்தும் “முன்னெச்சரிக்கை” என்ற பெயரில் பதிவிட்டிருந்தார்.
ஏர் இந்தியா விபத்துக்கு பிறகு அவரது இந்த பதிவுகள் மீண்டும் வெளிவந்ததும், இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர், தேசிய துயரத்தை பயன்படுத்தி தன் கணிப்புகளுக்கு பிரபலத்தைத் தேடுவதாக குற்றம்சாட்டினர். ஒருசிலர் அவரது திறமையை பாராட்டினாலும், பெரும்பாலானோர் அவரது கருத்துக்களால் கோபமடைந்தனர்.
ஒரு பயனர், “உங்கள் கணிப்புகளை நான் மதிக்கிறேன். ஆனால், ஒரு துயரத்தை பயன்படுத்தி புகழ் பெறுவது எல்லை மீறிய செயல்” என்று காட்டமாக பதிவிட்டார். மற்றொருவர், “என்ன பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறீர்கள்? ஜோதிடர்களை கழுகுகள் என்று மக்கள் சொல்வதில் ஆச்சரியமில்லை” என்றும் பலர் விமர்சித்தார்.
“கிரகங்களை வைத்து AI171 விபத்தை கணித்தீர்களா? அப்படியானால், உயிரிழந்த 250 பேர்களுக்கும் ஒரே ஜாதக அமைப்பா? ஜோதிடம் விதி அல்ல; அது ஒரு திசைதிருப்பல். பேரழிவுகள் நட்சத்திரங்களில் எழுதப்படவில்லை; அவை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சோகங்கள், சுரண்ட வேண்டியவை அல்ல” என்று சிலர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
சர்மிஸ்தாவுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்த போதும், இதுவரை அவர் எந்த விளக்கமோ, மன்னிப்போ வெளியிடவில்லை. அவரது பதிவுகள் இன்னும் பொதுவெளியில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.