முன்பெல்லாம், கூகுளில் ஏதாவது ஒரு விஷயம் குறித்து தேடும்போது, அந்த தகவல் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்பதை கூகுள் பயனர்களுக்கு அளிக்கும். அதை பயன்படுத்தி அந்த இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வார்கள். ஆனால், தற்போது, எந்த ஒரு விஷயத்தையும் கூகுள் தேடலில் தேடும்போது, கூகுள் AI ஓவர்வியூஸ் ஒரு சுருக்கமான பதிலை வழங்குகிறது. அந்த பதிலே பயனர்களுக்கு போதுமானதாக இருந்தால், பயனர்கள் வேறு இணையதளத்திற்கு செல்லாமல் அதிலேயே திருப்தி அடைந்து தங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். இதுதான் தற்போது இணையதளங்களை வைத்திருக்கும் வெளியீட்டாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
கூகுள் தனது அல்காரிதத்தில் AI ஓவர்வியூஸ் மூலம் பயனர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை அளித்துவிட்டால், “எங்களுடைய இணையதளத்திற்கு எப்படி வருவார்கள்? இதனால் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது” என்றும் அனைத்து வெளியீட்டாளர்களும் ஒன்று சேர்ந்து புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்போது கூகுள் தனது AI ஓவர்வியூஸ் பிரிவில் விளம்பரங்களையும் சேர்க்க தொடங்கியுள்ளது. இதுதான் வெளியீட்டாளர்களை இன்னும் கோபமடைய செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். “AI ஓவர்வியூஸ் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், இதில் அளிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் பல்வேறு இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டு சுருக்கமாக பயனர்களுக்கு அளிக்கப்படுவதாகவும், தங்களுடைய உள்ளடக்கத்தை வைத்து கூகுள் முறையற்ற முறையில் சம்பாதிக்கிறது” என்றும் குரல் கொடுத்து வருகின்றனர். இது வெளியீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது என்றும், கூகுள் தேடலில் தங்களுடைய இணையதளங்கள் மூலமாக மட்டுமே வந்தால் தான் தங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தங்களது உள்ளடக்கத்தில் இருந்தே எடுக்கப்படும் செய்திகள் தான் AI ஓவர்வியூஸ் என்ற பெயரில் வெளி வந்துவிடுகிறது என்றும், இதனால் இந்த அல்காரிதம் தங்களுக்குப் பெரும் பாதகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு கூகுள் மறுப்பு தெரிவித்துள்ளது. “கூகுள் தேடலில் உள்ள புதிய AI அனுபவங்கள் மக்களுக்கு இன்னும் பல கேள்விகளை கேட்க உதவுகிறது என்றும், இது உள்ளடக்கத்திற்கும், வணிகத்திற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றும், இதனால் இணையதளங்களுக்கு பாதிப்பு என்று வெளியீட்டாளர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் கூகுளின் இந்த AI ஓவர்வியூஸ் காரணமாக தங்களுக்கு டிராபிக் மிகவும் குறைந்து வருவதாகவும், அதனால் வருமான இழப்பும் ஏற்படுகிறது என்றும், ஆனால் “எங்களுடைய உள்ளடக்கத்தை வைத்து கூகுள் AI ஓவர்வியூஸ் செய்து, எங்களுக்கு வர வேண்டிய வருமானத்தைத் தானே எடுத்துக்கொள்கிறது” என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை எப்படி முடியும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.