கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக குழந்தையின்மையால் அவதிப்பட்டு, பல நாடுகளில் தொடர்ச்சியான செயற்கை கருத்தரிப்பு முயற்சிகளில் தோல்வியுற்ற ஒரு தம்பதி, இறுதியாக கருத்தரித்துள்ளனர். இது மருத்துவத்தில் AI கொண்டுவந்த ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கு சான்றாக அமைந்துள்ளது!
இந்த சாதனையை நிகழ்த்தியது, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கருத்தரிப்பு மையம். அங்குள்ள மருத்துவர்கள், புதிதாக உருவாக்கப்பட்ட AI-உதவி பெறும் அமைப்பை பயன்படுத்தி, அசோஸ்பெர்மியா (Azoospermia) என்ற அரிய நிலையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணின் விந்தணுவில் மிக குறைந்த அல்லது விந்தணுக்களே இல்லாத நிலையிலும், மறைந்திருந்த விந்தணுக்களை வெற்றிகரமாக கண்டறிந்தனர். பாரம்பரிய கண்டறிதல் முறைகள் பல ஆண்டுகளாகவே தோல்வி அடைந்த நிலையில், மனிதர்களால் சாதிக்க முடியாத இந்த இடத்தில், நவீன தொழில்நுட்பம் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தம்பதியினர் 18 ஆண்டுகளாக தோல்வியுற்ற கருத்தரிப்பு சிகிச்சையை தாங்கிக்கொண்டனர். இதற்கு முக்கியக் காரணம், ஆண் துணையின் ‘அசோஸ்பெர்மியா’ என்ற நிலையே ஆகும். இந்த நிலைக்கு வழக்கமாக, மிகவும் வலி மிகுந்த அறுவை சிகிச்சையோ அல்லது ஹார்மோன் சிகிச்சையோ மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் தான் இந்த இத்தம்பதியினர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் STAR (Sperm Tracking and Recovery) அமைப்பு வழங்கிய அதிநவீன தொழில்நுட்ப தீர்வை தேர்ந்தெடுத்தனர். இந்த அமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இமேஜிங் அல்காரிதம்களை பயன்படுத்தி, விந்தணு மாதிரிகளை ஸ்கேன் செய்து, மிக குறைந்த அளவில் விந்தணுக்கள் இருந்தாலும் கூட, சாத்தியமான விந்தணுக்களை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது.
அதன் விளைவு? இந்த அமைப்பு மூன்று மறைந்திருந்த விந்தணுக்களை கண்டறிந்தது! அந்த விந்தணுக்கள் பின்னர் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் கருமுட்டைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டு, ஒரு வெற்றிகரமான கர்ப்பத்திற்கு வழிவகுத்தது. இது உண்மையில் ஒரு மருத்துவ அதிசயம்!
STAR அமைப்பு, அதிவேக கேமராக்கள் மற்றும் AI-உதவி பெறும் இமேஜிங் மென்பொருள் பொருத்தப்பட்ட ஒரு மைக்ரோஸ்கோப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிப்பில் உள்ள விந்தணு மாதிரியை ஸ்கேன் செய்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 8 மில்லியனுக்கும் அதிகமான படங்களை ஆய்வு செய்கிறது.
AI ஆனது விந்தணுக்களை கண்டறியும் வகையில் பிரத்யேகமாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. அவை மற்ற செல்கள் அல்லது தேவையற்ற பொருட்களிலிருந்து வேறுபடுத்துவது கடினமாக இருந்தாலும் கூட, AI அதை துல்லியமாகக் கண்டறியும். அவ்வாறி கண்டறியப்பட்டதும், ஒவ்வொரு விந்தணுவும் ஒரு சிறிய துளியில் தனிமைப்படுத்தப்பட்டு, கருவியலாளர்கள் அதை பாதுகாப்பாக மீட்டெடுக்க அனுமதிக்கிறது.
“திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு நாட்கள் தேடியும் ஒரு விந்தணுவையும் கண்டறியாத நிலையில், இந்த அமைப்பு ஒரு மணி நேரத்தில் 44 விந்தணுக்களை கண்டறிந்தது” என்று கொலம்பியா பல்கலைக்கழக கருத்தரிப்பு மையத்தின் இயக்குநர் மற்றும் இந்த அமைப்பின் முன்னணி உருவாக்குநரான டாக்டர். ஜெவ் வில்லியம்ஸ் வியப்புடன் கூறினார்.
STAR அமைப்பு ஆண்களுக்கான மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை கண்டுள்ளது. இதன் காரணமாக இனி அறுவை சிகிச்சை மூலம் விந்தணு பிரித்தெடுத்தல், ஹார்மோன் சிகிச்சை மற்றும் விந்தணு தானத்தை பயன்படுத்துதல் ஆகிய வழிமுறைகள் முடிவுக்கு வந்துவிடும்.
மருத்துவச் சூழல்களில் செயற்கை நுண்ணறிவு தனது மதிப்பை தொடர்ந்து நிரூபித்து வருவதால், STAR போன்ற கருவிகள் உலகளவில் உள்ள கருத்தரிப்பு கிளினிக்குகளில் ஒரு நிலையான நடைமுறையாக மாறக்கூடும். 18 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி இந்த முறையின் மூலம் கருவுற்றதால், அனைத்து நம்பிக்கையையும் இழந்த தம்பதிகளுக்கு இந்த தொழில்நுட்பம் ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.