அகமதாபாத்தில் நடந்த கோரமான விமான விபத்தில், காணாமல் போன ஒரு திரைப்பட இயக்குநரின் குடும்பத்தினர் அவரது டி.என்.ஏ. மாதிரிகளைச் சமர்ப்பித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் அவரது செல்போனின் கடைசி சிக்னல் பதிவானதே இந்த கோரிக்கைக்கான காரணம்.
கடந்த வியாழக்கிழமை மதியம் 1:39 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானினகர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும், தரையில் இருந்த 29 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நரோடாவை சேர்ந்த மகேஷ் கலாவாடியா என்ற திரைப்பட இயக்குனர் அன்றைய மதியம் லாவ் கார்டன் பகுதியில் ஒருவரை சந்திக்கச் சென்றதாக அவரது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
“என் கணவர் மதியம் 1:14 மணிக்கு எனக்கு போன் செய்து, சந்திப்பு முடிந்துவிட்டதாகவும், வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. நான் போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. போலீஸுக்கு தகவல் கொடுத்த பிறகு, அவரது மொபைல் ஃபோனின் கடைசி இருப்பிடம் விபத்து நடந்த இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் இருந்ததை காட்டியது,” என்று ஹேதல் வேதனையுடன் கூறினார்.
மேலும், “அவரது போன் சுமார் 1:40 மணிக்கு அதாவது சரியாக விபத்துக்குள்ளான விமானம் கிளம்பிய ஒரு நிமிடத்திற்குப் பிறகு சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அவரது ஸ்கூட்டரும், மொபைல் ஃபோனும் காணவில்லை. பொதுவாக அவர் வீட்டுக்கு வர அந்த பாதையை பயன்படுத்தவே மாட்டார் என்பதால் இதெல்லாம் விசித்திரமாக உள்ளது. விமான விபத்தினால் தரையில் உயிரிழந்தவர்களில் அவரும் ஒருவரா என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ. மாதிரிகளைக் கொடுத்துள்ளோம்,” என்றும் ஹேதல் கூறினார்.
இந்த நிலையில் இந்த விபத்தில் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருப்பதால், உயிரிழந்தவர்களை அடையாளம் காண அதிகாரிகள் டி.என்.ஏ. பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா AI-171 விமான விபத்து, இதுவரை 270 உயிர்களை பலி வாங்கியுள்ளது. விபத்து நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு, நேற்று மருத்துவமனை அதிகாரிகள் டி.என்.ஏ. மூலம் 47 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர். இதில் 24 உடல்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Filmmaker Missing After Plane Crash: Family Submits DNA Samples for Identification!