இயற்கை சிலசமயம் விசித்திரமான முறையில் நம்முடன் பேசுகிறது. அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க இருந்தும், கடைசி நேரத்தில் தப்பிப் பிழைத்த சிலரின் வாழ்வில், தாயின் பாசமான வேண்டுகோள், தந்தையின் உள்ளுணர்வு போன்றவை அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளன.
கடந்த ஜூன் 12 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா-171 விமான விபத்தில் 241 உயிர்கள் பலியாகின. ஆனால், விதியால் தப்பிப் பிழைத்த சிலரின் கதைகள் இப்போது வெளிவந்துள்ளன.
இங்கிலாந்தில் பணிபுரியும் வதோதராவை சேர்ந்த வியாஸ், லண்டனுக்கு திரும்ப தயாராக இருந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு குடும்பத்தை பார்த்த சந்தோஷத்தில், புறப்படுவதற்கு முன் பெற்றோரிடம் ஆசி பெற சென்றார். அப்போது, அவரது தாயார், “இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுப் போடா கண்ணா,” என்று உணர்ச்சிவசப்பட்டு வேண்டினார். தாய் மற்றும் தந்தையின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, வியாஸ் தனது விமான டிக்கெட்டை ரத்து செய்தார். அன்று மதியம் விமான விபத்து பற்றிய செய்திகள் அவரது கைபேசியை நிரம்பியபோது, தாயின் உள்ளுணர்வு தனது உயிரை காப்பாற்றியதை உணர்ந்து கண்கலங்கினார்.
அதேபோல் நிகோலை சேர்ந்த சவ்ஜி டிம்பாடியா, லண்டனில் வசிக்கும் மகனை பார்க்கக் கிளம்ப தயாராக இருந்தார். ஆனால், வியாழக்கிழமை அதிகாலை எதிர்பாராத விதமாக, “இன்று விமானத்தில் பயணிக்க மனது சரியில்லை” என்று மகனிடம் தெரிவித்தார். திடீர் திட்ட மாற்றத்திற்கான காரணத்தை பற்றி கேட்டபோது, “ஒருவித மன அமைதியின்மை இருந்தது, அதை என்னால் விளக்க முடியவில்லை” என்று சவ்ஜி கூறினார். அன்று நண்பர் ஒருவர் விபத்து செய்தியை பார்க்கச் சொன்னபோது, சுவாமிநாராயணன் என் உயிரை காப்பாற்றினார்,” என நெகிழ்ந்தார்.
இன்னொரு சம்பவம் என்னவெனில் லண்டனில் உள்ள நண்பர் ரோஹித் யாதவ்வை சந்திக்க அகமதாபாத் விமான நிலையம் வந்திருந்த ஜெயமின் படேல் மற்றும் பிரியா படேல் ஆகிய இரு நண்பர்களும், தங்கள் ஆவணங்களில் இருந்த குறைபாடுகள் காரணமாக விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. எவ்வளவு கெஞ்சியும் ஏர் இந்தியா ஊழியர்கள் விதிமுறைகளைக் காரணம் காட்டி அவர்களை அனுமதிக்கவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய ஒரு மணி நேரத்தில் விபத்து செய்தியைக் கேட்டபோது, அதிர்ச்சியில் உறைந்தனர். “கடவுளுக்கும், எங்களை விமானத்தில் ஏற விடாத ஏர் இந்தியா ஊழியர்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்,” என்று ஜெயமின் தெரிவித்தார்.
விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய மற்றொருவர் பூமி சவுகான். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் விரக்தியடைந்திருந்தார். பாரூச்சை சேர்ந்த இவர், விடுமுறைக்கு பிறகு லண்டனில் உள்ள கணவரை பார்க்கத் திரும்பி சென்று கொண்டிருந்தார். போக்குவரத்து தாமதங்களால், போர்டிங் கேட்டு மூடிய 10 நிமிடங்களுக்கு பிறகே மதியம் 12:20 மணிக்கு விமான நிலையத்தை அடைந்தார். “விமானத்தில் ஏற அனுமதிக்குமாறு கெஞ்சினேன், ஆனால் அனுமதிக்கவில்லை,” என்று பூமி கூறினார். ஏமாற்றத்துடன் திரும்பும்போது விபத்து செய்தியை கேட்டதும், “அதிர்ச்சியடைந்தேன், என்னை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் மகனை இந்தியாவில் விட்டுச் சென்றிருந்தேன். இது கணபதி பாப்பாவின் அற்புதம்!” என பூரிப்புடன் கூறினார்.