தமிழக அரசியல் களத்தில் வழக்கமாக, சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் தேர்தல் பரபரப்புகள் சூடுபிடிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைகள், பிரச்சார கூட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் என அனைத்து பணிகளும் அப்போதுதான் தொடங்கும். ஆனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில், இப்போதே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதற்கு ஒரே காரணம், நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்துவிடுவாரோ என்ற பயம்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
“ஓர் அணியில் திரள்வோம்” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இரண்டு திராவிட கட்சித் தலைவர்களுமே கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதற்கு, விஜய்க்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செல்வாக்கே காரணம் என்று கூறப்படுகிறது.
சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் போல் விஜய்யும் அதிகபட்சமாக ஐந்து முதல் பத்து சதவீதம் வரைதான் வாக்குகள் பெறுவார்கள் என ஆரம்பத்தில் அரசியல் கட்சிகள் தப்பு கணக்கு போட்டன. ஆனால், விஜய் கட்சியின் முதல் பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்கள் கூட்டம், பரந்தூருக்கு சென்றபோது ஏற்பட்ட பரபரப்பு, வேங்கைவயல் கிராமத்திற்கு செல்லப்போகிறேன் என்று சொன்னவுடன் அந்த வழக்கை அவசர அவசரமாக முடித்தது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது, விஜய்யை பார்த்து ஆளும் கட்சி பயப்பட்டு வருவதாக தெரிகிறது.
அதேபோல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், விஜய் கூட்டணியில் சேர்ந்தால் மட்டுமே கரை சேர முடியும் என்பதால், முடிந்தவரை விஜய்க்குத் தூது விட்டுக்கொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜய் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் நிச்சயம் கூட்டணி சேர மாட்டார் என்றும், தனித்துப் போட்டி அல்லது தனி கூட்டணி என்ற முடிவில்தான் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பின்படி, அவருக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகும் என்று கூறப்படுவதால், அவர் அநேகமாக ஆட்சியை பிடித்துவிடுவார் அல்லது ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் இடத்தில் இருப்பார் என்றுதான் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் ஒரு வருடத்திற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்க வைத்த விஜய், வழக்கம் போல் நிதானமாகவே தனது அடுத்தடுத்த படிகளை எடுத்து வைப்பார் என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ ஆகியவை அடுத்தடுத்து விஜய்யின் கட்சியில் இருந்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இளைஞர்களின் ஒட்டுமொத்த வாக்குகள், முதல் முறையாக வாக்களிப்பவர்களின் வாக்குகள், கிட்டத்தட்ட 40 வயதுக்கு உட்பட்ட பெண்களின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் ஆகியவை விஜய்க்கு அதிகமாக விழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பட்டியல் இனத்தவர் மற்றும் வன்னியர் ஆகிய இரண்டு சமூகத்தினரும் விஜய்க்கு வாக்களிக்க இருப்பதாக கூறப்படுவதும் ஒரு பெரிய அரசியல் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், விஜய் 2026 ஆம் ஆண்டில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துவார் என்றும், இரண்டு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பும் சக்தி அவருக்கு இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.