குஜராத் ஹிமத்நகரை சேர்ந்த பாயல் கடிக் என்ற இளம் பெண், தன் தந்தை ஓட்டும் சுமை ரிக்ஷாவின் வருமானத்தில் வளர்ந்தவர். வெளிநாட்டிற்கு முதல்முறையாக விமானத்தில் பயணிக்கவிருந்ததால், வியாழக்கிழமை காலை அவரது முகத்தில் அத்தனை உற்சாகம்! குடும்பத்திலேயே முதல்முறையாக வெளிநாடு செல்லும் பெருமை அவருக்கு கிடைத்ததாக உறவினர்கள் பெருமையுடன் சொன்னார்கள். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் படிக்க அவர் இங்கிலாந்து நோக்கி பறந்து கொண்டிருந்தார்.
காலை 10 மணிக்கு சற்று முன்னதாக, அவரது குடும்பத்தினர் பாயலுக்கு அன்புடன் விடை கொடுத்தனர். அவர் பத்திரமாக லண்டன் கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்து, படிப்பில் ஜொலிப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் வீடு திரும்பினர்.
ஆனால், அவர்களுக்கு காத்திருந்தது கடந்த 15 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமானப் பேரிடர்.
அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா AI-171, போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில விநாடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பாயல் கடிக் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். விமானம் ஒரு மாணவர் விடுதி மீது விழுந்ததால், தரையில் இருந்த சிலரும் தங்கள் உயிரை இழந்தனர். இந்த கோர விபத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார்.
பாயல் கடிக் குடும்பத்திற்கு அதாவது அவரது தந்தை, தாய், மற்றும் சகோதர சகோதரிகளுக்கு “ஏன் இப்படி நடந்தது?” என்ற கேள்வி இப்போது முக்கியமில்லை. தங்கள் மகள் இறந்துவிட்டார் என்பதும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டது என்பதும்தான் அவர்களுக்கு தெரிந்த ஒரே உண்மை.
“கல்லூரி முடித்ததும் எங்களுடனேதான் இருந்தாள். லண்டனில் மேலும் படிக்க ஆசைப்பட்டாள். அதனால் அவளது படிப்புக்காக கடன் வாங்கினோம்…” என்று அவரது தந்தை சுரேஷ் கடிக் மனம் உருக பேசினார். பாயலின் எதிர்கால வேலை, அந்த கடனை திருப்பி செலுத்தவும், குடும்பத்திற்கு ஆதரவாகவும், வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்கவும் உதவும் என்ற நம்பிக்கையில் அவர் அந்த கடன்களை வாங்கினார். இப்போது, அந்த கடன்களை எப்படித் திருப்பி செலுத்துவது என அவர்களுக்கு வழி தெரியவில்லை.
உதய்பூரில் B.Tech முடித்துவிட்டு, M.Tech படிக்க லண்டன் சென்றாள். “எங்கள் குடும்பத்தில் வெளிநாடு சென்ற முதல் நபர் அவள்தான் ஆனால் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது. எங்கள் குடும்பம் ஆழ்ந்த துயரத்தில் உள்ளது…” என்று அவரது உறவினர் பரத் சவுகான் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த பாயல், “மிகவும் நல்ல பெண்” என்று குடும்ப நண்பர் சுசீலா பதக் கூறுகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக சுசீலாவின் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார் பாயல்.
அவர் ஹிமத்நகரில் உள்ள ஆதர்ஷ் பள்ளியில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்ததாகவும், பின்னர் ஹிமத் உயர்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை முடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அவள் படித்தவள். அவளுக்கு சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள்.. அவளது தந்தை ஒரு கைரிக்ஷா ஓட்டுநர். ஆனால் அவளது குடும்பத்தின் நிதி நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை,” என்று சுசீலா கூறினார். இங்கிலாந்துக்கு செல்வதற்கு முன் தனது மகனுக்கு பாடம் சொல்லி கொடுத்த கடைசி முறையாக 30 நாட்களுக்கு முன்புதான் பாயலை சந்தித்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.