குஜராத் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, போயிங் நிறுவனத்தின் மீதான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விபத்துக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே, போயிங்கின் முன்னாள் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் ஜான் பார்னெட் போயிங் 787 ட்ரீம்லைனர் விமான தயாரிப்பில் உள்ள அபாயகரமான குறைபாடுகள் குறித்து எச்சரித்திருந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
30 ஆண்டுகள் போயிங்கில் பணியாற்றிய பார்னெட், 2017 இல் ஓய்வு பெற்றவர். போயிங் நிறுவனம் லாபத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பை அலட்சியப்படுத்துவதாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 787 ட்ரீம்லைனர் விமானங்கள் தரமற்ற பாகங்களை கொண்டு அசெம்பிள் செய்யப்படுவதாகவும், தரக்கட்டுப்பாடு வழக்கமாக தவிர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த குறைபாடுகள் குறித்து அவர் மிகவும் கவலையடைந்ததால், அந்த விமானத்தில் பயணிக்கவே மறுத்தாராம்!
பார்னெட்டின் குற்றச்சாட்டுகள் தீவிர ஆய்வுக்கு உள்ளாயின. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மார்ச் 2024 இல், சவுத் கரோலினாவில் ஒரு ஹோட்டல் அறையில் பார்னெட் இறந்து கிடந்தார். அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக தற்கொலை என்று அறிவிக்கப்பட்டாலும், போயிங் நிறுவனத்திற்கு எதிராக அவர் அளித்த சாட்சியத்திற்கு சில வாரங்களுக்கு பிறகு இது நடந்ததால், இது கொலையாகவும் இருக்கலாம் என அப்போதே வதந்தி பரவியது.
வியாழக்கிழமை மாலை அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், பார்னெட் எச்சரித்த அதே போயிங் 787 ட்ரீம்லைனர் மாடல் ஆகும். போயிங்கின் உற்பத்தி அலட்சியத்தை பற்றி வெளிப்படையாக பேசிய பலரில் பார்னெட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லோரும் சேர்ந்து கொன்னுட்டிங்களேடா.. போயிங் 787 ட்ரீம்லைனர் பாதுகாப்பானது அல்ல.. எச்சரித்த தரக்கட்டுப்பாடு மேனேஜர் கொலையா?