கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்: அனைத்து போயிங் விமானங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: ஏர் இந்தியாவுக்கு DGCA வலியுறுத்தல்..!

  அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி அனைத்து போயிங் 787 ரக விமானங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட…

dgca

 

அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி அனைத்து போயிங் 787 ரக விமானங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் நோக்கி புறப்பட்ட AI-171 விமானம், அகமதாபாத் விமான நிலையத்தில் கிளம்பிய சில விநாடிகளிலேயே ஒரு கட்டிடத்தில் மோதி தீப்பிழம்பானது. இந்த சம்பவம் நாடெங்கிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில், முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகளைத் தவிர, விமானம் மோதிய மருத்துவர்கள் விடுதியில் இருந்த பலரும் இந்த கோர விபத்தில் தங்கள் உயிரை இழந்தனர். ஏர் இந்தியா விமான விபத்து, நாட்டின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில், போயிங் 787, 788, மற்றும் 789 ரக விமானங்கள் குறித்து ஏர் இந்தியாவுக்கு DGCA அனுப்பிய முக்கிய கடிதம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், போயிங் விமானங்களில் மேம்பட்ட பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு விமான நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

DGCA-ன் கடிதம் சில முக்கிய பராமரிப்புகளை செய்யுமாறு ஏர் இந்தியாவிற்கு அறிவுறுத்தியுள்ளது. 12.06.2025 அன்று நடந்த விபத்தை தொடர்ந்து, Genx இன்ஜின்கள் பொருத்தப்பட்ட B 787-8/9 ரக விமானங்களில், சம்பந்தப்பட்ட பிராந்திய DGCA அலுவலகங்களுடன் ஒருங்கிணைந்து உடனடியாக இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அவை:

ஜூன் 15, 2025 அன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்தியாவில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் ஒருமுறை ஆய்வு கட்டாயம்.

எரிபொருள் அளவு கண்காணிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை சரிபார்க்க வேண்டும்.

விமானத்தின் உள்ளே காற்று வழங்கும் கம்ப்ரசர் (Cabin air compressor) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

எலக்ட்ரானிக் இன்ஜின் கட்டுப்பாட்டு அமைப்புகளை சோதிக்க வேண்டும்.

இன்ஜின் எரிபொருள் இயக்கி (Engine Fuel Driven Actuator) செயல்பாட்டு சோதனை மற்றும் எண்ணெய் அமைப்பை சரிபார்க்க வேண்டும்.

ஹைட்ராலிக் அமைப்பின் சேவைத்திறனை ஆய்வு செய்ய வேண்டும்.

விமானத்தின் Take-off parameters சரிபார்க்க வேண்டும்.

அடுத்த அறிவிப்பு வரும் வரை, ‘விமானக் கட்டுப்பாட்டு ஆய்வு’ (Flight Control Inspection) என்னும் புதிய ஆய்வு, பயண ஆய்வில் சேர்க்கப்பட வேண்டும்.

இரண்டு வாரங்களுக்குள் ‘பவர் அஷ்யூரன்ஸ் சோதனைகள்’ (Power assurance checks) மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த 15 நாட்களில் B787-8/9 ரக விமானங்களில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை விரைந்து சரி செய்ய வேண்டும்.

இந்தச் சோதனைகளின் அறிக்கையை DGCA-க்கு உடனடியாக சமர்ப்பிக்குமாறும் ஏர் இந்தியாவை DGCA அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க உதவும் என நம்பப்படுகிறது.

ஏர் இந்தியாவுக்கு DGCA அனுப்பிய இந்த கடிதம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ’கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்’ என்றும் ’இதை ஆரம்பத்திலே செய்திருந்தால் 241 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்’ என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இப்போதாவது சுதாரித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து இனிமேல் இது போன்ற விபத்துகளை நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று பதிவு செய்து வருகின்றனர்.