ஆடி அடங்கும் வாழ்க்கையடா… கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் கேபிள் டிவி துறை.. இனி எல்லாம் டிஜிட்டல் மயம் தான்..!

  சுமார் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு, கேபிள் டிவி என்பது பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த ஒரு வசதியாக இருந்தது. அதன் பின்னர், கலைஞர் தொலைக்காட்சி இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, கேபிள்…

cable tv

 

சுமார் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு, கேபிள் டிவி என்பது பணக்காரர்களிடம் மட்டுமே இருந்த ஒரு வசதியாக இருந்தது. அதன் பின்னர், கலைஞர் தொலைக்காட்சி இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, கேபிள் டிவி சாதாரண மக்களின் வீடுகளுக்கும் சென்று சேர்ந்தது. ஆனால், அதே நேரத்தில், குறுகிய காலத்தில் கேபிள் டிவி “தாதாக்களின்” கைகளுக்கு சென்றதாகவும், அவர்கள் நிர்ணயித்த கட்டணமே சட்டம் என்று அராஜகமாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அதுமட்டுமின்றி, கேபிள் டிவி வயர்கள் ஒழுங்கற்று பலரது வீடுகளின் மாடிகளிலும், தெருக்கள் மற்றும் சாலைகளின் குறுக்கிலும் இருந்ததால் பல இடையூறுகள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது கேபிள் டிவிக்கு ஒரு வழியாக விரைவில் “மூடு விழா” ஏற்படும் என்று கூறப்படுகிறது. வளர்ந்து வரும் டிஜிட்டல் மாற்றங்களில் பல தொழில்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அந்த வகையில் ஒன்றுதான் கேபிள் டிவியும் என்று கணிக்கப்படுகிறது. இணைய இணைப்பு இருந்தால் போதும், நேரடியாக வைஃபை மூலம் டிவியில் இணைத்து அனைத்து சேனல்களையும் பார்த்துக்கொள்ளலாம் என்ற வசதி வந்துவிட்டதால், கேபிள் டிவி இணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

7 ஆண்டுகளுக்கு முன்னால் 151 மில்லியனாக இருந்த கேபிள் டிவி இணைப்புகள், தற்போது 111 மில்லியனாக குறைந்துவிட்டதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் மேலும் வெகுவாகக் குறையும் என்றும் கூறப்படுகிறது. இணையம் மூலம் பார்ப்பதைத்தான் மக்கள் தற்போது விரும்புகின்றனர் என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் கட்டண சேனல்கள் பயன்பாடு பாதியாக குறையும் என்றும், கேபிள் டிவி தொழிலும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் மாற்றங்களால் பல தொழில்கள் காணாமல் போன நிலையில், கேபிள் டிவி உட்பட இன்னும் ஒரு சில தொழில்களும் காணாமல் போக அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் பொதுமக்களை பொறுத்தவரை கூடுதல் வசதிதான் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஸ்டார் , அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், சோனி லைவ், ஜீ டிவி போன்ற OTT தளங்கள்தான் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன என்றும், ஐபிஎல் உள்பட பல கிரிக்கெட் மற்றும் விளையாட்டு போட்டிகளையும் டிஜிட்டல் மூலமே பார்த்துக்கொள்வதால், கேபிள் டிவி இணைப்பு என்பது இனி தேவையற்றதாக ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மொபைலிலேயே எல்லாமே பார்க்கும் வசதி வந்துவிட்டது என்பதும், தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.