எலான் மஸ்க், X தளத்தில் இன்று முதல், அதாவது ஜூன் 27, வெள்ளிக்கிழமை முதல் கட்டண விளம்பரங்களில் ஹேஷ்டேக்குகள் பயன்படுத்தப்படாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த தடை விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும், பொதுவான பயனர்களின் வழக்கமான பதிவுகளுக்கு அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
X தளத்தின் உரிமையாளரான மஸ்க், தனது சொந்த பதிவில், அழகியல் ரீதியாக பெரும் சிக்கலை ஏற்படுத்தும் ஹேஷ்டேக்குகள், X தளத்தின் விளம்பரங்களில் தடை செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, X பயனர்கள் தங்கள் விளம்பரங்களின் உள்ளடக்கம் மற்றும் இலக்கு பார்வையாளர்களுக்கு ஏற்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துவார்கள். சில சமயங்களில், பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பயனர்கள் தங்கள் தயாரிப்பு குறித்து பதிவிட ஊக்குவிக்கவும் தனித்துவமான ஹேஷ்டேக்குகளை உருவாக்குவதுண்டு.
விளம்பரங்கள் பயனர்களுக்கு சென்றடைதலை அதிகரிக்கவும், பரந்த பார்வையாளர்களை ஈர்க்கவும், எந்த ஹேஷ்டேக்குகள் அதிகம் ஈடுபாட்டை உருவாக்குகின்றன என்பதை கண்காணிக்கவும் பிரபலமான மற்றும் டிரெண்டிங் ஹேஷ்டேக்குகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு பயனர், வழக்கமான பதிவுகளில் ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துவது இன்னும் பரிந்துரைக்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, X தளத்தின் AI உதவியாளர் க்ரோக் (Grok) சுவாரஸ்யமான ஒரு பதிலை தந்துள்ளது.
“ஜூன் 27, 2025 முதல் விளம்பரங்களுக்கான ஹேஷ்டேக் தடை இருந்தாலும், வழக்கமான X பதிவுகளுக்கு ஹேஷ்டேக்குகள் இன்றும் பயனுள்ளதாகவே இருக்கும்,” என்று பதிலளித்தது.
ஹேஷ்டேக்குகள் ஒரு பதிவின் தெரிவுநிலையையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் என்று கூறிய க்ரோக், ஒரு பதிவுக்கு 1-2 பொருத்தமான ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துமாறு பரிந்துரைத்தது. அதிகமாக பயன்படுத்தினால் ‘ஸ்பேம் ஆக தோன்றலாம் என்றும் எச்சரித்தது.
“X-இன் தேடல் போன்ற கருவிகளை கொண்டு டிரெண்டிங் மற்றும் குறிப்பிட்ட ஹேஷ்டேக்குகளை ஆய்வு செய்யுங்கள். ஹேஷ்டேக் சமூகங்களுடன் இணைந்து செயல்படுங்கள், அதிகபட்ச ரீச்சை அடைய உச்ச நேரங்களில் பதிவிடுங்கள்,” என்றும் க்ரோக் குறிப்பிட்டது.
“எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு X தளத்தில் விளம்பரப்படுத்துபவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்புக்கு பல பயனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான விளம்பரங்களில் ஏராளமான ஹேஷ்டேக்குகள் எரிச்சலடைய வைக்கிறது என்றும், குறிப்பாக சினிமா விளம்பரங்களில் ஒரே ஒரு லைன் ட்விட்டில் 10க்கும் மேற்பட்ட ஹேஷ்டேக் லைன்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.